/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமைச்சர்கள் தொகுதியில் மினி ஸ்டேடியத்திற்கு இடமும், நிதியும் இல்லை: தேடி தேடி அலைந்து பரிதவிக்கும் அதிகாரிகள்
/
அமைச்சர்கள் தொகுதியில் மினி ஸ்டேடியத்திற்கு இடமும், நிதியும் இல்லை: தேடி தேடி அலைந்து பரிதவிக்கும் அதிகாரிகள்
அமைச்சர்கள் தொகுதியில் மினி ஸ்டேடியத்திற்கு இடமும், நிதியும் இல்லை: தேடி தேடி அலைந்து பரிதவிக்கும் அதிகாரிகள்
அமைச்சர்கள் தொகுதியில் மினி ஸ்டேடியத்திற்கு இடமும், நிதியும் இல்லை: தேடி தேடி அலைந்து பரிதவிக்கும் அதிகாரிகள்
ADDED : ஜூன் 07, 2025 04:44 AM

மதுரை: மதுரையில் ஒன்பது தொகுதிகளில் 'மினி ஸ்டேடியம்' அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டும் அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு தொகுதிக்கு நிதி ஒதுக்காமலும், அமைச்சர் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதிக்கு இடம் தேர்வு செய்ய முடியாமலும் இழுபறியாக உள்ளது.
வடக்கு தொகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச தடகள அரங்கு, அதன் உட்பகுதியில் இயற்கை புல்தரை கால்பந்து மைதானம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அடுத்ததாக வரும் டிசம்பரில் நடக்கவுள்ள உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கிப் போட்டிக்கான மைதானமும், பார்வையாளர் அரங்கும் தயாராகி வருகிறது.
சர்வதேச நீச்சல் போட்டி நடத்துவதற்கான 50 மீட்டர் நீச்சல் குளத்திற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் கிடைக்காத நிலையில் உள்ளது. ஸ்குவாஷ் தவிர மற்ற அனைத்து போட்டிகளுக்கான அரங்குகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ளன.
ஆனால் மாவட்டம் முழுவதற்குமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கும் விளையாட்டு சங்கங்கள் போட்டியை நடத்துவதற்கும் ரேஸ்கோர்ஸை விட்டால் வேறு இடமில்லை. எனவே தமிழக அரசு 110 விதியின் கீழ் வடக்கு தாலுகா தவிர மீதியுள்ள ஒன்பது எம்.எல்.ஏ., தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் 'மினி ஸ்டேடியம்' அமைக்கப்படும் என இரண்டாண்டுகளுக்கு முன் அறிவித்தது.
ஒவ்வொரு தொகுதியிலும் இடத்தை தேர்வு செய்ய விளையாட்டு துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். திருமங்கலத்தில் அரசுப் பள்ளியில் அமைப்பதென முடிவானது.
சோழவந்தானில் 6 ஏக்கரில் இடம் அமைந்த நிலையில் அங்கு கூடைபந்து, வாலிபால், கபடி அரங்கு, 200 மீட்டர் ஓடுகளம், நவீன ஜிம் கூடம், சிறிய பார்வையாளர் காலரி அமைக்கப்பட்டது. மைதானம் முழுக்க சரளை கற்களாக அமைந்துள்ளதால் அங்கு விளையாட்டுக்கான பணிகள் இன்னும் துவங்கவில்லை.
'மினி ஸ்டேடியம்' திட்டம் அறிவித்த போதே மதுரை கிழக்கு சார்பில் சக்கிமங்கலத்தில் 6 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு நுழைவு அனுமதி பெறப்பட்டது. அரசு அறிவித்த முதல் நிலையில் சோழவந்தானில் ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
2வது நிலையில் உசிலம்பட்டி சீமானுாத்து பகுதியிலும், மேலுாரில் கருத்த புளியம்பட்டியிலும் இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டிற்கான அரசாணை பெறப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ஒன்றிரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அனுமதி கிடைப்பதால் அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு தொகுதியான சக்கிமங்கலத்திற்கு 3வது நிலையில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடமே இல்லையாம்
அமைச்சர் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதிக்கான இடத்தேர்வு இதுவரை நடைபெறவே இல்லை. எல்லீஸ்நகரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்குட்பட்ட ஒன்றே கால் ஏக்கரில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கூடுதலாக கூடைபந்து அரங்கு, ஜிம், கழிப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறைந்தது 6 ஏக்கர் இடம் இருந்தால் தான் 200 மீட்டர் டிராக், வாலிபால், கபடி, பார்வையாளர் காலரி அமைக்க முடியும். இதற்கு மாற்று திட்டம் தயாரிக்கலாம் என்கின்றனர் விளையாட்டு பயிற்சியாளர்கள்.
அவர்கள் கூறியது:
எல்லீஸ்நகர் ஹாக்கி மைதானம், அருகிலுள்ள தனியார் அலுவலகம் என இரண்டு அலுவலகத்திற்கு மட்டும் செல்லும் 30 அடி அகல ரோடு உள்ளது. தனியார் அலுவலகத்தை ஒட்டியே மற்றொரு ரோடு பிற ரோடுகளுடன் இணையும் வகையில் உள்ளது.
ஹாக்கி மைதான ரோட்டையொட்டி கிருதுமால் நதியின் 15 அடி அகல திறந்தநிலை வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலில் வழக்கம் போல, குப்பை, கழிவுநீர் சேர்ந்து தண்ணீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மாநகராட்சியிடம் என்.ஓ.சி., பெற்று ரோட்டை மைதானமாக்கலாம். வாய்க்காலின் மேல் கான்கிரீட் தளம் அமைத்து மைதானத்தை நீட்டித்தால் மூடப்பட்ட கான்கிரீட் கால்வாயில் கழிவோ, குப்பையோ சேருவது நிரந்தரமாக தடுக்கப்படும். ஆக்கிரமிப்பு உருவாவதற்கும் வாய்ப்பில்லை. இதற்காக நீர்வளத்துறையிடம் என்.ஓ.சி., பெற்றால் போதும்.
ஹாக்கி மைதானத்தை சுற்றியுள்ள மொத்தமாக தேர்ந்தெடுத்தால் குறைந்தது 4 ஏக்கர் கிடைக்கும். கபடி, வாலிபால், கூடைபந்து அரங்கு அமைக்க ஏற்பாடு செய்யலாம். அடுத்த தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் அமைச்சர் தியாகராஜன் முழுமூச்சுடன் இதற்காக வேலை செய்தால் மதுரை மத்தியில் 'மினி ஸ்டேடியம்' அமைக்கலாம் என்றனர்.