/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மரணபயம் காட்டுறாங்க; மாட்டுத்தாவணியில் தடம்மாறும் டிரைவர்கள்; டீசலை மிச்சப்படுத்த விதிமீறி இயக்குவதால்
/
மரணபயம் காட்டுறாங்க; மாட்டுத்தாவணியில் தடம்மாறும் டிரைவர்கள்; டீசலை மிச்சப்படுத்த விதிமீறி இயக்குவதால்
மரணபயம் காட்டுறாங்க; மாட்டுத்தாவணியில் தடம்மாறும் டிரைவர்கள்; டீசலை மிச்சப்படுத்த விதிமீறி இயக்குவதால்
மரணபயம் காட்டுறாங்க; மாட்டுத்தாவணியில் தடம்மாறும் டிரைவர்கள்; டீசலை மிச்சப்படுத்த விதிமீறி இயக்குவதால்
ADDED : டிச 14, 2024 06:59 AM

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் சென்னை தடத்தில் செல்லும் அரசு சிறப்பு பஸ்களை விதிமீறி எதிர் எதிரே நிறுத்துவதோடு வெளியேறும்போது டவுன் பஸ்களின் வழிதடத்தில் செல்வதால் பயணிகளை தெறிக்கவிடுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே மெயின் ரோட்டில் ஆம்னி பஸ்ஸ்டாண்ட் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
இந்த பஸ் ஸ்டாண்டில் நுழைந்தவுடன் வலதுபுறம் டவுன் பஸ்கள் செல்ல வேண்டும். வெளியூர் பஸ்கள் நேராக சென்று சுற்றி வந்து தங்களுக்கான தடத்தில் நிற்க வேண்டும். பல ஆண்டுகளாக இதை டிரைவர்கள் பின்பற்றி வருவதால் பஸ் ஸ்டாண்டிற்குள் எந்த போக்குவரத்து நெருக்கடியும் இல்லாமல் இருந்தது. ஆனால் சமீபகாலமாக சிறப்பு பஸ்களால் செயற்கையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
பண்டிகை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 80 சிறப்பு பஸ்கள் வரை மாட்டுத்தாவணியில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் சென்னை தடத்தில் ஒரு பஸ் மட்டும் நடுவில் செல்லும் வகையில் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன. இடம் இல்லாதபட்சத்தில் நேருக்கு நேராகவும் நிறுத்துகின்றனர்.
இதனால் பிற பஸ்கள் தங்களுக்கான தடத்திற்கு செல்ல முடியாமல் வரிசையாக காத்திருக்கின்றன. இந்தவரிசை பஸ்ஸ்டாண்டுக்கு வெளியே மெயின் ரோட்டில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வரை நீள்கிறது. சில டிரைவர்கள் 'ஓவர் டேக்' செய்து பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைய முயற்சிப்பதால், மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வெளியூர் பஸ்கள் அனைத்தும் பஸ்ஸ்டாண்டை சுற்றிவந்து வெளியேற வேண்டும். ஆனால் சிறப்பு பஸ்கள் அனைத்தும் 'டீசலை' மிச்சப்படுத்த டவுன் பஸ்கள் நிற்கும் வழியாக சென்று வெளியேறுகின்றன. இதனால் அப்பகுதியில் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகிறது. மரண பயத்துடனே அவர்கள் கடந்து செல்கின்றனர்.
பஸ்களை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ள போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் போலீசார் 'புகார்' கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இருமுறை சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதாவிடம் போலீசார் வீடியோ, போட்டோ ஆதாரங்களைக் காண்பித்தும் எந்த பலனும் இல்லை. போலீசாரும், போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் இணைந்து தேவையான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.