/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் ஓட்டுத்திருட்டை தடுக்க கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்; சொல்கிறார் திருமாவளவன்
/
தமிழகத்தில் ஓட்டுத்திருட்டை தடுக்க கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்; சொல்கிறார் திருமாவளவன்
தமிழகத்தில் ஓட்டுத்திருட்டை தடுக்க கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்; சொல்கிறார் திருமாவளவன்
தமிழகத்தில் ஓட்டுத்திருட்டை தடுக்க கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்; சொல்கிறார் திருமாவளவன்
ADDED : அக் 27, 2025 03:59 AM
அவனியாபுரம்: ''தமிழகத்தில் ஓட்டுத் திருட்டை தடுக்க தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்,'' என, மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் யோசனை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 3 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இதனை நடைமுறைப்படுத்தக்கூடாது.
பீகாரில் ஓட்டுத்திருட்டு நடந்ததை போல் தமிழகத்திலும் நடக்கும். இதைத் தடுக்க தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
பல்கலை மசோதா சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வி.சி.க., சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் மறுசீராய்வு செய்வதாக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ஜ., பொறுப்பில் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் அரசியல் செய்வதற்கு களம் இல்லாமல் விரக்தி அடைந்துள்ளார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல வி.சி.க., வுக்கு எதிராக அவர் அவதுாறு பேசி வருகிறார். அண்ணாமலை எப்படி பிரசாரம் செய்தாலும் பா.ஜ., தலைமைக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை.
ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தி வி.சி.க., சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. புதிய சட்டம் இயற்றுவது குறித்த முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. வரும் சட்டசபைக் கூட்டத் தொடரில் ஆணவ படுகொலைக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.
2026 தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதியில் ஏதாவது ஒன்றில் வி.சி.க., போட்டியிடுமா என பலரும் கேட்கின்றனர். தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு பெறுவதைப்பொறுத்து முடிவு செய்யப்படும் என்றார்.

