/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீஸ் வளையத்தில் திருப்பரங்குன்றம்
/
போலீஸ் வளையத்தில் திருப்பரங்குன்றம்
ADDED : டிச 06, 2025 05:52 AM
திருப்பரங்குன்றம்: போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் திருப்பரங்குன்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் டிச. 3 அன்று கோயில் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும், 144 தடை உத்தரவு இருப்பதாலும் மலைமேல் தீபத் துாணில் தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர்.
டிச. 4 அன்றும் நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்ற மனுதாரர் ராம ரவிக்குமார் வழக்கறிஞருடன் திருப்பரங்குன்றம் வந்தார். அன்றும் அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறி அனுமதி மறுக்கப்பட்டது. பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே திருப்பரங்குன்றம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 926 பேர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் வீதிகளில் எங்கு பார்த்தாலும் போலீஸ்காரர்களே தென்படுகின்றனர். மலை மேல் செல்ல நேற்று 2 ம் நாளாக போலீசார் தடை விதித்துள்ளனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுகின்றனர்.

