UPDATED : நவ 08, 2026 05:42 PM
ADDED : நவ 08, 2026 05:38 PM
பேரையூர்: பேரையூரிலிருந்து மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு நேரடி அரசு பஸ் வசதி இல்லாததால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். பேரையூரில் இருந்து பெரியார் பஸ்ஸ்டாண்ட் இடையே 48 கி.மீ., உள்ளது. இதற்கு 2 மணி நேரம், 3 பஸ்கள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது. பேரையூரில் இருந்து டி.கல்லுப்பட்டி, திருமங்கலம்,பெரியார் பஸ் ஸ்டாண்ட் என 3 பஸ்களில் பயணித்தே மதுரைக்கு வர வேண்டி உள்ளது.
பேரையூரைச் சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் மருத்துவமனைகள், நிறுவன பணியாளர்கள், தொழில் துறையினர் என பலரும் மதுரை செல்கின்றனர். மதுரைக்கு செல்வதைவிட, வேலை முடிந்து திரும்பும் போது பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
ஒருபுறம் சோர்வு மறுபுறம் மூட்டை முடிச்சுகளுடன் பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து திருமங்கலம் வந்து, பின் தங்கள் ஊருக்கு திரும்ப அவதிப்படுகின்றனர். பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து டி. கல்லுப்பட்டி வரை இயங்கும் பஸ்களை பேரையூர் வரை நீட்டிப்பு செய்து இயக்கினால் மக்கள் பயனடைவர்.
