ADDED : டிச 26, 2024 05:01 AM
நாகப்பட்டினம்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆணிக்காட்டைச் சேர்ந்தவர் காளிதாஸ்,32. இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் வேளாங்கண்ணி சர்ச்சில் நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு ஊருக்கு செல்வதற்காக வேளாங்கண்ணி ரயில்வே ஸ்டேஷன் சென்றுள்ளார். ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த காளிதாசை, மர்மநபர்கள் மூவர் தாக்கி, அவரிடம் இருந்த 65 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.
சம்பவம் குறித்து நாகை இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் வேளாங்கண்ணி ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டான்ட் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்குமார்,40, சக்திவேல்,29, மதுரை சிவா,24, என்பதும், காளிதாசை தாக்கி பணம் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

