/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மும்முனை மின்விநியோகம் நேரம் குறைப்பால் பாதிப்பு
/
மும்முனை மின்விநியோகம் நேரம் குறைப்பால் பாதிப்பு
ADDED : மார் 17, 2025 06:54 AM
பேரையூர் : பேரையூர் தாலுகாவுக்குட்பட்ட டி. கல்லுப்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் மும்முனை மின்சார விநியோக நேரம் குறைவாக இருப்பதால் விவசாய பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது.
இப்பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கிணற்றுப் பாசனம், போர்வெல் மூலம் காய்கறி, நெல், தென்னை விவசாயம் நடக்கிறது. மும்முனை மின்சாரம் மூலம் மோட்டாரை இயக்கினால் மட்டுமே பல ஏக்கர் நிலங்களில் பாசன வசதி மேற்கொள்ள முடியும்.
தினமும் 6 முதல் 8 மணி நேரமே மும்முனை மின்சார விநியோகம் உள்ளது. குறைவான நேரம் கிடைக்கும் மும்முனை மின்சாரம் மூலம் சாகுபடி பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் கடந்தாண்டு பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. விவசாயிகள் பணிகளை தொடர்கின்றனர். கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு இருந்தும் மும்முனை மின்விநியோகம் குறைவான நேரமே உள்ளதால் முழுமையாக நீர்பாய்ச்ச முடியவில்லை. இதனால் மண், நீர் வளம் இருந்தும் விவசாய உற்பத்தியில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை. மின் வினியோக நேரத்தை அதிகப்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.