/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுட்டெரிக்கும் கோடையை சமாளிப்பது தினமும் கடைபிடிக்க வேண்டியது குறித்து 'டிப்ஸ்'
/
சுட்டெரிக்கும் கோடையை சமாளிப்பது தினமும் கடைபிடிக்க வேண்டியது குறித்து 'டிப்ஸ்'
சுட்டெரிக்கும் கோடையை சமாளிப்பது தினமும் கடைபிடிக்க வேண்டியது குறித்து 'டிப்ஸ்'
சுட்டெரிக்கும் கோடையை சமாளிப்பது தினமும் கடைபிடிக்க வேண்டியது குறித்து 'டிப்ஸ்'
ADDED : ஏப் 16, 2025 04:16 AM
திருப்பரங்குன்றம் : 'அப்பப்பா... என்ன வெயிலு. குளிச்சிட்டு வெளியே வந்தாலே 'குப்'னு வேர்க்குது. எப்படிதான் சமாளிக்கிறது' என ஒவ்வொருவரும் இந்த கோடையில் புலம்பாத நாளில்லை. 'உணவு முறைகள் உள்ளிட்டவற்றை பின்பற்றினாலே கோடை வெயிலை சமாளித்து விடலாம்' என்கிறார் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவர் கோபிமணிவண்ணன்.
அவர் கூறியதாவது: மாறிவரும் உணவு பழக்கங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்க செய்கின்றன. அதிகாலை வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதில் ஆரம்பித்து துரிதஉணவு, அரைவேக்காடு உணவு, கோதுமை, பட்டை தீட்டிய அரிசி, குளிர்பானம் என அனைத்திலும் அதிகமாக உப்பு, காரம், இனிப்பு சேர்க்கப்படுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்யும்.
உணவுமுறையை மாற்றுங்க...
உணவு கெடாமல் பாதுகாக்க சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள், சுவையூட்டிகள் மற்றும் செயற்கை வண்ணங்கள் யாவும் கோடையில் மட்டுமல்ல எப்போதுமே தவிர்க்கப்பட வேண்டியவை. இவையே புற்று நோய்களுக்கு காரணிகளாகும். துரித உணவுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அரிசி, கோதுமையில் தயாரிக்கப்படும் ஒரே வகையான உணவுகளை தினம் சாப்பிடுதல், ஒரே வகை ரீபைண்ட் எண்ணெய்யை ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுவது தவறான உணவுப் பழக்கமாகும். கோடைகால சரும பாதிப்பு, வெட்கை, அம்மை போன்ற நோய்களுக்கு அதிகரிக்கும் வெப்பம் மட்டுமே காரணமாகாது. நாம் உட்கொள்ளும் உணவுகளும் அதன் ஜீரணமும்கூட காரணம்.
நீர்ச்சத்துள்ள உணவுகள்
எனவே நமது உடல் நலனை கருத்தில் கொண்டு இயற்கை உணவுகளை நாடிச் செல்ல வேண்டியது அவசியம். இளநீர், பதநீர், நுங்கு இவற்றுடன் நீரும், மோரும் அதிகமாக எடுத்துக்கொள்வதால் கோடை காலத்தில் உடல் சோர்வு ஏற்படாமல் ஆரோக்கியம் காக்கப்படும். நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், சவ்சவ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் மற்றும் பீன்ஸ் வகைகள் சமையலில் அதிகம் பயன்படுத்தலாம். எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி, கொய்யா மற்றும் கீரை வகைகளில் உயிர் சத்துக்களும், கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, தாது உப்புக்களும் அதிகளவில் இருப்பதால் தினமும் சாப்பிட வேண்டியது அவசியம்.
சிறுதானியம் 'பெஸ்ட்'
பாரம்பரிய உணவு முறையில் கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உணவுகளை உட்கொள்வதால் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் நமது உடலுக்கு கிடைக்கிறது. இவை எளிதில் ஜீரணமாவதுடன் நச்சு கலப்பு இல்லாத உணவு பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
காலை, மாலை குளிர்ந்த நீரில் குளிப்பது, வாரத்தில் 2 நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது சருமத்தின் நீர் தன்மையை சமப்படுத்தும். உச்சி வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. உப்பு, காரம், எண்ணெய் நிறைந்த உணவுகள், சிவப்பு மாமிசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கால நிலைக்கு ஏற்ப சரியான உணவுகளை தேவையான அளவு சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு மருந்து என்பது தேவைப்படாது. இவ்வாறு கூறினார்.