/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தடகள டிராக்கில் 'டவுட்'; ஓட்டப்பந்தயத்தின் போது உதிரும் ரப்பர் துகள்கள்
/
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தடகள டிராக்கில் 'டவுட்'; ஓட்டப்பந்தயத்தின் போது உதிரும் ரப்பர் துகள்கள்
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தடகள டிராக்கில் 'டவுட்'; ஓட்டப்பந்தயத்தின் போது உதிரும் ரப்பர் துகள்கள்
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தடகள டிராக்கில் 'டவுட்'; ஓட்டப்பந்தயத்தின் போது உதிரும் ரப்பர் துகள்கள்
UPDATED : ஆக 06, 2025 09:17 AM
ADDED : ஆக 06, 2025 01:15 AM

மதுரை; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்ட 400 மீட்டர் சிந்தடிக் தடகள டிராக்கின் மேற்புறத்தில் இருந்து ரப்பர்துகள்கள் அதிகளவில் உதிர்ந்து வருகின்றன. கடந்தாண்டு சிந்தடிக் தடகள டிராக், உட்புறத்தில் இயற்கை புல்தரை கால்பந்து மைதானம் அமைப்பதற்காக ரூ.8.24 கோடி ஒதுக்கப்பட்டது. 2025 ஏப்ரலில் பணிகள் முடிந்து மாவட்ட விளையாட்டு அலுவலகத்திடம் மைதானம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் மைதான டிராக்கில் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஓடும் போது ஏற்படும் அதிர்வில் டிராக்கில் ஒட்டப்பட்டுள்ள செயற்கை ரப்பர் துகள்கள் அதிகளவில் உதிர்ந்து வெளிப்புறத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் ரப்பர் துகள்கள் சரியான முறையில் ஒட்டப்படவில்லையோ என சந்தேகம் எழுப்புகின்றனர் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள்.
அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள அனைத்து குறுவட்ட பள்ளிகளுக்குமான தடகள போட்டிகள் இங்கு தான் நடத்தப்படும். ஏப்ரலில் டிராக் திறக்கப்பட்டு இப்போது தான் மாணவர்கள் ஓட ஆரம்பித்துள்ளனர். அதற்குள் ரப்பர் துகள்கள் உதிர்வு அதிகமாகி விட்டது. ரப்பர் துகள்கள் அதிகமாக உதிர்ந்தால் மாணவர்கள் ஓடும் போது வேகம் கிடைக்காது என்பதோடு சில நேரங்களில் வழுக்கி விடுவதற்கும் வாய்ப்புள்ளது.
மாணவர்களுக்கு பயனில்லை நீளம் தாண்டுதல் டிராக்கின் 3 வரிசைக்கும் சேர்த்து நீண்ட பலகை அமைக்க வேண்டும். மாணவர்கள் நீளம் தாண்ட வரும் போது பலகையில் காலை வைத்தால் அழுத்தம் அதிகரித்து தாண்டும் திறன் கூடும். இருபக்க நீளம் தாண்டும் டிராக்கிலும் ஒரு வரிசை அளவு மட்டுமே பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல மும்முறை தாண்டுதலுக்கும் பலகையின் மீது காலை வைத்து அழுத்தும் போது தான் வேகமும் திறனும் கூடுதலாக கிடைக்கும். அதற்கான பலகை அமைக்கவில்லை. அதற்கு பதிலாக டிராக்கின் மேல் வண்ண ஸ்டிக்கர் ஒட்டி அதில் காலை வைத்து தாண்டச் சொல்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை.
இந்த மைதானம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் நீளம் தாண்டுதல் பலகை, மும்முறை தாண்டுதல் பலகையும் சர்வதேச தரத்தில் அமைக்க வேண்டும். இதற்கு அதிகம் செலவாகாது என்பதால் அதை சரிசெய்ய வேண்டும்.
நீளம் தாண்டுதல் டிராக்கை ஒட்டியுள்ள மழைநீர் வடிகால் குழாயின் மீது சிமென்ட் சிலாப் பொருத்தி மூட வேண்டும். அதை அப்படியே விட்டதால் பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பை போல தேங்கி மழைநீர் வெளியேறுவதை தடை செய்கிறது.
நீளம் தாண்டுதல் டிராக்கை சுற்றி பூசப்பட்டுள்ள சிமென்ட் பூச்சும் அதற்குள் சேதமடைந்துள்ளது. அடுத்தடுத்து போட்டிகள் நடந்தால் சேதம் அதிகமாகும்.
டிராக்கின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள இயற்கை புல்தரை கால்பந்து மைதானத்தில் நான்கு மாதங்களாகியும் புல் சரியாக முளைக்கவில்லை. 30 சதவீதம் புல் இன்றி தரை வெளியே தெரிகிறது. எனவே மாவட்ட விளையாட்டு நிர்வாகம் விரைந்து சரிசெய்ய வேண்டும் என்றனர்.