காற்றாலை மின் கொள்முதல் நடைமுறைகளில் மாற்றம் தேவை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
காற்றாலை மின் கொள்முதல் நடைமுறைகளில் மாற்றம் தேவை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 23, 2026 03:06 AM
மதுரை: காற்றாலை மின்கொள்முதலில் உற்பத்தியாளர்களின் திறந்தவெளி பயன்பாடு, 'பேங்கிங்' உள்ளிட்ட நடைமுறைகளில்மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்என மின்வாரிய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் 9500 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்துவதுடன், மின்வாரியத்திற்கும் விற்பனை செய்கின்றன.
இந்த ஆண்டு காற்றாலை மின்சாரம் குறைந்ததால் மின்சந்தையில், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20 க்கும்கூடுதலான விலையில் 3500 மெகாவாட் அளவுக்கு தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. காற்றாலை மின்கொள்முதல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் கூடுதல் விலையில் வாங்குவதை தவிர்க்கலாம்என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ரூ.4400 கோடி நஷ்டம் தமிழ்நாடு மின்வாரிய இன்ஜினியர்கள் யூனியன் பொதுச்செயலாளர் கோவிந்தராஜன் கூறியதாவது:
தமிழகத்தில் காற்றாலை உற்பத்தி குறையும் காலங்களில் மீண்டும் வழங்கும் 'பேங்கிங்' நடைமுறை உள்ளது. மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் இடையே ஏற்படும் வேறுபாட்டை சமாளிக்க, கூடுதல் மின்சாரத்தை மின்வாரியமே சேமித்து மின்உற்பத்தியாளர்களுக்கு வழங்குகிறது.
இதன்படி, மின் உற்பத்தியாளர்கள் மின்சாரத்தை மின் தொகுப்புகளில் சேர்ப்பதற்கு வசதியாக, சொந்த உற்பத்தியை அரசு குறைத்துக்கொள்கிறது. இதன்மூலம் அரசுக்குஒவ்வொரு ஆண்டும் ரூ. 2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது.
ஒரு மெகாவாட்டுக்கு மேல் மின்பளு பெற்றுள்ள மின் உற்பத்தியாளர்களே திறந்தவெளி பயன்பாடுதிட்டத்தில் பங்கேற்க முடியும். ஆனால் 0.63 மெகாவாட் மின்பளு உள்ள நுகர்வோரும் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதன்படி 2 ஆயிரத்து 257 உயரழுத்த மின்நுகர்வோர், ஆண்டுக்கு ரூ.2400 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர்.
பசுமை எரிசக்தியை ஊக்குவித்தல் என்ற பெயரில் ஒரு மெகா வாட்டுக்கு மேல் என்ற விதி தளர்த்தப்பட்டு, பலர் கூட்டாக இணைந்து 100 கிலோ வாட் மின்பளு பெற்றால், திறந்தவெளி பயன்பாடு திட்டத்தில் இணையவும் அனுமதிக்கப் பட்டுள்ளது.
இதனால் விநியோக பிரிவில் கணக்கிடுவதில் குழப்பம் ஏற்பட்டு நிர்வாக ரீதியான நஷ்டம் ஏற்படுகிறது.
இதுபோன்ற மின்கொள்முதல் நடைமுறைகளால் மின்வாரியத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி நஷ்டம் ஏற்படுகிறது. எனவே காற்றாலை மின்கொள்முதல் நடைமுறையில் மாற்றம் அவசியமாகிறது என்றார்.
