/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜி.எஸ்.டி., வரி சீரமைப்புக்கு வர்த்தகர்கள், விவசாயிகள் வரவேற்பு
/
ஜி.எஸ்.டி., வரி சீரமைப்புக்கு வர்த்தகர்கள், விவசாயிகள் வரவேற்பு
ஜி.எஸ்.டி., வரி சீரமைப்புக்கு வர்த்தகர்கள், விவசாயிகள் வரவேற்பு
ஜி.எஸ்.டி., வரி சீரமைப்புக்கு வர்த்தகர்கள், விவசாயிகள் வரவேற்பு
ADDED : செப் 05, 2025 04:03 AM
மதுரை: மத்திய அரசின் ஜி.எஸ்.டி., இரண்டடுக்கு வரி சீரமைப்பு முறைக்கு வர்த்தகர்கள், தொழில்துறையினர், விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மாத ஆரம்பத்தில் அமல் ஜெயபிரகாசம், கவுரவ ஆலோசகர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியா பாரிகள் சங்கம்: அனைத்து விதமான கார வகைகள், உலர்பழங்கள், நிலக் கடலைக்கு 5 சதவீதமாக வரி குறைத்தது வரவேற்கத் தக்கது. செப். 22 முதல் வரி மாற்றம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரு மாதத்திற்கு இருவேறு வரி கணக்குகளை பின்பற்றுவது சிரமம். எனவே மாத ஆரம்பத்தில் இருந்து வரிக்குறைப்பை அமலுக்கு கொண்டு வரவேண்டும்.
நிதிபாதுகாப்பை ஊக்குவிக்கும் ரத்தினவேலு, தலைவர், அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம்: மருத்துவ காப்பீட்டு சேவைகளுக்கு 18 சத வீதத்தில் இருந்து வரி விலக்கு அளித்தது வரலாற்று சிறப்புமிக்க முடிவு. இது மக்களிடம் நிதிப் பாதுகாப்பை ஊக்குவிக்கும். எங்களது கணக்கீட்டின்படி இந்த வரி சீரமைப்பு மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.1500 முதல் ரூ.2000 வரை செலவு குறையும்.
வரிவிலக்கு பாராட்டத்தக்கது ஜெகதீசன், தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்: 12 மற்றும் 5 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளித்தது பாராட்டத்தக்கது. ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த மாதத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்பதும், இந்த ஆண்டு டிசம்பர் முதல் வழக்குகள் விசாரிக்கப்படும் என்ற அறிவிப்பும், தொகையை திரும்ப வழங்குதல் (ரீபண்ட்) விஷயத்தில் இடைக்கால நிவாரணமாக 90 சதவீதம் உடனடியாக கொடுக்கப்படும் என்பது தொழில் வணிகத்துறைக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் அன்புராஜன், தலைவர், இந்திய பேக்கரி சங்க கூட்டமைப்பு தலைவர்: பேக்கரி உணவுப்பொருட்களுக்கான 18 சதவீத அளவு வரி இருந்ததை தற்போது பிரட்டுக்கு வரி விலக்கு அளித்து மற்றவற்றுக்கு 5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. எங்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. புதிய வரி சீரமைப்பின் மூலம் தொழில்கள் வளர்ச்சியை நோக்கி செல்லும். அப்போது பொதுமக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதன் மூலம் எங்களது உற்பத்தி பொருட்கள் அதிகரிப்பதன் மூலம் மத்திய அரசுக்கான வரி வரு வாயும் அதிகமாகும்.
இடுபொருள் செலவு குறையும் பெருமாள், தேசிய துணைத்தலைவர், பாரதிய கிசான் சங்கம்: விவசாய இடு பொருட்களுக்கு வரி விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தோம். டிராக்டர்கள், அதற்கான டயர்கள், பாகங்கள், பூச்சிக்கொல்லி, பயிர்களுக்கான நுண்ணுாட்டச் சத்துக்கள், சொட்டு நீர்ப் பாசன அமைப்பு, தெளிப்பான்களுக்கு 18 சதவீதம், 12 சதவீதம் என்றிருந்த வரி 5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய இடுபொருள் செலவு குறையும் என்றாலும் முழுமையான வரி விலக்கின் மூலமே விவ சாயிகள் உற்பத்தி செலவை குறைக்க முடியும்.
இவ்வாறு கூறினர்.