/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரஸ்க் வகைகளுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கேட்கும் வர்த்தகர்கள்
/
ரஸ்க் வகைகளுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கேட்கும் வர்த்தகர்கள்
ரஸ்க் வகைகளுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கேட்கும் வர்த்தகர்கள்
ரஸ்க் வகைகளுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கேட்கும் வர்த்தகர்கள்
ADDED : மே 24, 2025 08:19 PM
மதுரை:தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் உள்ளிட்டோர் மதுரையில் கூறியதாவது:
கோதுமை அல்லது மைதா மாவில் வட்ட பன், பால் பன், ரஸ்க், வர்க்கி தயாரிக்கப்படுகிறது. பன் ஈரப்பத வடிவிலும், ரஸ்க் உலர் நிலையிலும் தயாரிக்கப்படுவதை தவிர, மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தவில்லை.
ஆனால், பன்னுக்கு 5 சதவீதம், ரஸ்க், வர்க்கி வகைகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பிரட் வகைகளுக்கு தற்போது வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரஸ்கையும் வரிவிலக்கில் சேர்க்க வேண்டும்.
மைதா அல்லது கோதுமையில் இருந்து சேமியா, நுாடுல்ஸ் தயாரிக்கப்பட்டாலும் சேமியா, அரிசி அடைக்கு, 5 சதவீதம், நுாடுல்ஸ்க்கு 12 சதவீத வரி என மாறுபட்டுள்ளது. இதை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
அதேபோல, ஈர இட்லி மாவு, ஈர தோசை மாவில், 'பிரிசர்வேடிவ்' சேர்க்காததாலும், அதிகபட்சம் ஒருநாள் வரையே தாங்கும். எனவே, காய்கறி, இறைச்சியை போன்று இவற்றுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும். சாதாரண பிஸ்கட்களுக்கு 5 சதவீதம், உலர் பழங்கள், உலர் பருப்புகள், கிரீம்களுடன் தயாராகும் பிஸ்கட்களுக்கு 18 சதவீதம் வரி உள்ளது. மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம் பயன்பட்டாலும், 12 சதவீதமாக வரியை குறைக்க வேண்டும்.
அப்பளம், வடகத்திற்கு வரிவிலக்கு உள்ளது. ஆனால், காய்கறியிலிருந்து வேக வைத்தோ அல்லது உலர வைத்தோ தயாரிக்கப்படும் வற்றலுக்கு 5 சதவீத வரியுள்ளது. வற்றல் என்பது தென்னிந்திய உணவுகளில் பிரதானம். இதைப்பற்றிய புரிதல் இல்லாததால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கும் வரிவிலக்கு வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.