/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழி தோண்டியதால் 2 மாதம் போக்குவரத்து துண்டிப்பு
/
குழி தோண்டியதால் 2 மாதம் போக்குவரத்து துண்டிப்பு
ADDED : ஜூலை 26, 2025 04:41 AM

கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டி கணேசபுரத்தில் குழாய் பதிக்க ரோட்டின் நடுவே குழி தோண்டியதால் கிராம போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இப்பகுதி மக்களின் வீட்டுத் தேவைக்காக 10 ஆண்டுகளுக்கு முன் போர்வெல் அமைக்கப்பட்டது. கிராமத்தில் ரோட்டின் ஒரு பகுதியில் போர் வெல், மறுபுறம் சுவிட்ச் பெட்டி, குளியல் தொட்டி அமைக்கப்பட்டது. ரோட்டின் கீழ் பகுதியில் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.
கிராமத்திற்கு அருகே கண்மாயில் உள்ள மணலை அள்ள லாரிகள் சென்றதால் குழாய்கள் உடைந்தன. மோட்டாரும் பழுதானது.
அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவே குழாய் உடைப்பை சரி செய்ய பள்ளம் தோண்டியதோடு சரி. இதுவரை சரி செய்யவில்லை.
அதனால் தனி தீவில் வசிப்பது போல் முடங்கி கிடக்கிறோம் என்கின்றனர் மக்கள்.
அப்பகுதி கஜேந்திரன் கூறியதாவது: குழாய் பதிக்க குழி தோண்டி 2 மாதங்களுக்கு மேலாகிறது. அதனால் வீடுகளுக்கு செல்ல முடியாமல் நீண்ட துாரம் வயல் வழியாக சுற்றிச் செல்லும் அவலம் நிலவுகிறது.
இரவில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அச்சத்துடனே செல்கிறோம். முதியவர்கள் பள்ளத்தை தாண்டும் போது தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
தனியார் விவசாய நிலங்களில் போர்வெல் தண்ணீரை பருக, குளிக்க பயன்படுத்தி வருகிறோம். அதிகாரிகள் தலையிட்டு குழாய் பதித்து மோட்டாரை பழுது நீக்கி தர வேண்டும் என்றார்.

