/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகை எக்ஸ்பிரஸ் 48வது 'ஹேப்பி பர்த் டே' திருஷ்டி கழித்து மகிழ்ந்த ரயில் சினேகிதர்கள்
/
வைகை எக்ஸ்பிரஸ் 48வது 'ஹேப்பி பர்த் டே' திருஷ்டி கழித்து மகிழ்ந்த ரயில் சினேகிதர்கள்
வைகை எக்ஸ்பிரஸ் 48வது 'ஹேப்பி பர்த் டே' திருஷ்டி கழித்து மகிழ்ந்த ரயில் சினேகிதர்கள்
வைகை எக்ஸ்பிரஸ் 48வது 'ஹேப்பி பர்த் டே' திருஷ்டி கழித்து மகிழ்ந்த ரயில் சினேகிதர்கள்
ADDED : ஆக 16, 2025 03:34 AM

மதுரை: மதுரையின் அடையாளமான 'வைகை' விரைவு ரயிலின் 48வது பிறந்த நாளை ரயில் ஆர்வலர்கள் நேற்று கேக் வெட்டிக் கொண்டாடினர்.
ஆக. 15, 1977ல் மதுரை - சென்னை இடையே 'வைகை' விரைவு ரயில் முதன் முதலில் இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயில் மீட்டர் கேஜ் பாதையில் 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்ட முதல் ரயில் என்ற பெருமை வைகை ரயிலைச் சேரும். முன்பு பச்சை, மஞ்சள் வண்ணங்களில் தனித்துவமாக வலம் வந்தது. ரயில் கார்டுக்கும், ஓட்டுனருக்கும் இடையே இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்ட முதல் ரயில் இதுவாகும்.
தனது முதல் நாள் ஓட்டத்தில் மதுரை - சென்னை இடையிலான 495 கி.மீ., துாரத்தை 7 மணி 5 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்தது. 2022 மார்ச் 3ல் 495 கி.மீ., துாரத்தை 6 மணி 43 நிமிடத்தில் கடந்து தனது முதல் நாள் சாதனையை முறியடித்தது. மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்படும் ரயில்களில் ஏ.சி., சேர் கார், பேன்ட்ரி கார் உள்ளிட்ட பெட்டிகள் முதன்முதலில் இந்த ரயிலில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன. வேகத்தில் மதுரையின் 'ராஜ்தானி'யாக உள்ள இந்த ரயிலின் பிறந்த நாளை ரயில் ஆர்வலர்கள் நேற்று கொண்டாடினர்.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் காலை 6:40 மணிக்கு சென்னை புறப்பட இருந்த வைகை ரயிலை அலங்கரித்து, பூஜை செய்து, தீபாராதனை காட்டப்பட்டு திருஷ்டி கழிக்கப்பட்டது. பின் வைகை ரயிலில் ஓட்டுநர்களாக பணியாற்றிய தேவராஜ், மணி, ஜெகநாதன், மைக்கேல், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர். அவர்களுக்கு ரயில் ஆர்வலர்கள் மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவப்படுத்தினர்.
பின் ஓட்டுநர்கள் செல்வராஜன், கொடிமுத்து, உதவி ஓட்டுநர்கள் பார்த்தசாரதி, கார்த்திக், ரயில் மேலாளர் கோபி ஆகியாருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். ரயிலில் ஏ.சி., சேர்கார் பெட்டியில் டி.டி.இ.,க்கள் கேக் வெட்டி பயணிகளுக்கு வழங்கினர். ஏற்பாடுகளை ரயில் ஆர்வலர்கள் அருண்பாண்டியன், ஹரி, ஆகியோர் செய்தனர். பா.ஜ., மாநில செயலாளர் கதலி நரசிங்கப்பெருமாள், இல. அமுதன், போட்டித் தேர்வு ஆலோசகர்கள் பாண்டுரங்கன், திருஞானசம்பந்தன்ஆகியோர் பங்கேற்றனர்.