ADDED : டிச 27, 2024 05:13 AM

மதுரை: மதுரையில் தேசிய புள்ளியியல் அலுவலகம், புள்ளியியல் மற்றும் இந்திய திட்ட அமலாக்க அமைச்சகம் இணைந்து சமூக, பொருளாதார கணக்கெடுப்பு நடத்த உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இக்கணக்கெடுப்பு, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு விதமான தலைப்பில் நடைபெறும்.
இந்தாண்டு 'சுகாதாரம்' என்ற தலைப்பில் 80வது சுற்றை புத்தாண்டு முதல் துவக்க உள்ளது. இந்தச் சுற்று வீட்டுச் சமூக நுகர்வு, சுகாதாரத்துறையின் அடிப்படை அளவுத் தகவல்களை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடும்ப பண்புகள், நோயுற்ற தன்மை, மருத்துவமனையில் சேரும் விகிதம், பொது, தனியார் சுகாதார பாதுகாப்பு நிறுவனங்களின் பயன்பாடு, மருத்துவமனை பிரசவங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றை கொண்டுள்ளது.
இதையடுத்து தேசிய புள்ளியியல் அலுவலகம் மூலம் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இதில் மண்டல இயக்குனர் விஷ்ணுராஜ் பேசுகையில், ''கணக்கெடுப்பில் பொதுமக்கள், குடும்பத்தினர் மருத்துவமனைகளில் பெறும் சிகிச்சை, அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது, பிரசவ கால இறப்பு விகிதம், தனியார், அரசு விரிவான காப்பீடு திட்டங்களை பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது'' என்றார். இணை இயக்குனர் சுந்தர் ஆனந்த், உதவி இயக்குனர்கள் ரத்தினம், பழனியப்பன், அஜித்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

