/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாரம்பரிய அரிசி, சிறுதானிய உணவு தயாரிக்க பயிற்சி
/
பாரம்பரிய அரிசி, சிறுதானிய உணவு தயாரிக்க பயிற்சி
ADDED : மார் 14, 2024 04:12 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில், மகளிர் தினம், சர்வதேச நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு பெண்கள் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் சக்தி பெண்கள் முன்னேற்றம், கல்வி அறக்கட்டளை சார்பில், 'கிரியேட் - நமது நெல்லை பாதுகாப்போம்' கருத்தரங்கு நடந்தது.
'கிரியேட்' தலைவர் துரைசிங்கம் தலைமை வகித்தார். காந்தி மியூசிய உதவிப் பேராசிரியர் சபுராபீவி அலமீன் வரவேற்றார். மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் துவக்கி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது: பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்களில் உணவு பதார்த்தம் தயாரிப்பதை வரவேற்கிறேன். இவ்வகை உணவுகள் கொழுப்புச் சத்து குறைவாகவும், ஊட்டச்சத்து நிறைவாகவும் உள்ளதால் உடல் பருமன் ஏற்படாது. இதய நோய், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் வராமல் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவும் என்றார்.
பேராசிரியர் துரைசிங்கம் பேசியதாவது: 2006 முதல் 'நெல் திருவிழா' மூலம் விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு நமது அரிசியை சேமிக்கும் பிரசாரத்தை எடுத்துச் செல்கிறோம். பாரம்பரிய அரிசியை உட்கொள்வதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நுகர்வோருக்கு இருந்தாலும், தயாரிப்பில் உள்ள நடைமுறை சிக்கலால் சந்தைப்படுத்துதல் பாதிக்கிறது என்றார்.
சென்னை பயிற்சியாளர் சீதாலட்சுமி, சீரக சம்பா, முடவட்டுக்கல் அரிசி, துாயமல்லி சாதம், கிச்சலி சம்பா சாதம், குதிரைவாலி சாதம், பூங்கார் அரிசி தேங்காய் பாயாசம், மாப்பிள்ளை சம்பா பொங்கல், ரங்கூன் புட்டு போன்ற 20 க்கும் மேற்பட்ட உணவு பதார்த்தங்கள் தயாரிக்க பயிற்சி அளித்தார். கல்லுாரி ஆசிரியர்கள் கார்த்திகேயன், சாந்தி உணவு பதார்த்தங்களை ருசித்து பாராட்டினர். திட்ட இயக்குநர் சுரேஷ் கண்ணா நன்றி கூறினார்.

