/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
த.வெ.க., அணிகள் பட்டியலில் திருநங்கை அணிக்கு 9ம் இடமா; திருநங்கை செயற்பாட்டாளர்கள் கண்டனம்
/
த.வெ.க., அணிகள் பட்டியலில் திருநங்கை அணிக்கு 9ம் இடமா; திருநங்கை செயற்பாட்டாளர்கள் கண்டனம்
த.வெ.க., அணிகள் பட்டியலில் திருநங்கை அணிக்கு 9ம் இடமா; திருநங்கை செயற்பாட்டாளர்கள் கண்டனம்
த.வெ.க., அணிகள் பட்டியலில் திருநங்கை அணிக்கு 9ம் இடமா; திருநங்கை செயற்பாட்டாளர்கள் கண்டனம்
ADDED : பிப் 12, 2025 11:11 PM

மதுரை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக (த.வெ.க.) புதிய அணிகள் பட்டியல் வெளியான நிலையில் அதில் திருநங்கை அணிகளுக்கு ஒன்பதாம் எண்ணில் குறிப்பிட்டுள்ளது தவறு என திருநங்கை செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கேற்ப 28 அணிகள் உருவாக்க திட்டமிடப்பட்டது.
ஏற்கனவே 19 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிேஷார் உடன் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் சந்தித்த நிலையில் நேற்று முன்தினம் புதிதாக 9 அணிகள் உருவாக்கப்பட்டதாக பட்டியல் வெளியானது.
இதில் ஒன்பதாம் இடத்தில் திருநங்கைகள் அணி என இடம்பெற்றுள்ளது. ஒன்பதாம் எண்ணில் திருநங்கைகள் அணியை குறிப்பிடுவதா என திருநர் இயக்க செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் 'நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விஷயம். அதை ஒன்பதாம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன. இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஆவண மைய இயக்குநர் பிரியாபாபுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோசமான மனநிலை
அவர் கூறியதாவது:
இது மிகவும் மோசமான மனநிலை. தெரிந்து செய்தார்களா தெரியாமல் செய்தார்களா என்பதை முதலில் விளக்க வேண்டும். வேண்டுமென்றே ஒன்பதாம் எண்ணில் திருநங்கை அணி என குறிப்பிடுவதற்கு பின்னால் மிகப்பெரிய வன்மம் இருக்க வேண்டும்.
அணி என தனியாக குறிப்பிட்டது நல்ல விஷயம் தான் என்றாலும் இந்த கேலியை கடந்து செல்ல முடியாது. திருநர் செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா கண்டனத்தை பதிவு செய்தது சரியே.
இன்னமும் அடிப்படையே தெரியாமல் பனையூருக்குள் உட்கார்ந்து கொண்டே அரசியல் செய்வது என்றால் எப்படி.
இந்த அணிகளை அமைத்தது யார், பொறுப்பாளர்கள் யார் என்பதை விஜய் கவனிக்க வேண்டாமா. அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்குமா என்ன.
ஏற்கனவே 'சிவகாசி' உட்பட அவரது படங்களில் திருநங்கைகளை பற்றிய கிண்டல், கேலி நிறையவே இடம்பெற்றுள்ளது. பட்டியல் எண்ணை மாற்றி மறுஅறிவிப்பு செய்தால் தான் திருநங்கைகளுக்கு மரியாதை கிடைக்கும் என்றார்.
இதுகுறித்து த.வெ.க. கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகனிடம் கேட்டபோது, ''கட்சியிடமிருந்து அப்படியொரு பட்டியல் வெளியிடப்படவில்லை. தலைமை அலுவலகத்தில் இருந்து யாரும் அனுப்பவில்லை'' என்றார்.

