/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உண்டியல் திருடியவருக்கு போக்குவரத்து பணி
/
உண்டியல் திருடியவருக்கு போக்குவரத்து பணி
ADDED : செப் 04, 2024 07:05 AM

உண்டியல் திருடியவருக்கு போக்குவரத்து பணி
உசிலம்பட்டி: இடையபட்டி அருகே உள்ள சிவன் கோயிலில் உண்டியல் உடைத்து ரூ.3 ஆயிரம் திருடு போனது. விசாரித்த உத்தப்பநாயக்கனுார் போலீசார், உசிலம்பட்டி ஆறுமுகம் 40, என்பவரை கைது செய்து நீதித்துறை நடுவர் எண் 2 ல் நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி, ஆறுமுகத்தை ஒரு வாரம் போக்குவரத்தை சீர்படுத்தும் பணி செய்யுமாறு உத்தரவிட்டார். அவருக்கு போக்குவரத்து அருள்சேகர், இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் விவரங்களை கற்பித்து, பணியில் ஈடுபட வைத்தனர்.
பணம் திருட்டு
மதுரை: பொதும்பு செந்தில்குமார் 55. மதுரை நகருக்கு டூவீலரில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது தத்தனேரியில் டீ குடித்தார். அப்போது டூவீலர் 'சீட் லாக்' கை உடைத்து ரூ.40 ஆயிரத்தை மர்மநபர் திருடிச்சென்றார். செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மதுரை: சிம்மக்கல் பாலாஜி 39. மின்வாரியத்தில் கேங்மேனாக இருந்தார். புதுார் மின்வாரியத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி காயமுற்றார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நகை திருட்டு
கொட்டாம்பட்டி: பாண்டாங்குடி சதீஷ்குமார் சிங்கப்பூரில் பணிபுரிகிறார். இவரது குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன் பூமங்கலப்பட்டி உறவினர் வீட்டிற்கு சென்றனர். நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது கதவு, பீரோ உடைக்கப்பட்டு நாலரை பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் விசாரிக்கிறார்.
அடுத்தடுத்து இரு கொலைகள்
வாடிப்பட்டி: செமினிப்பட்டி காமராஜபுரம் காலனி பாண்டியன் 34, விவசாய கூலி. அதேபகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 36. இவர்களுக்குள் செப்.,1ல் குடிபோதையில் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டதில் இருவரும் காயமடைந்தனர். தலைக்காயமடைந்த பாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலை இறந்தார். சிகிச்சையில் உள்ள சேகர் மீது வாடிப்பட்டி போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
84 வயதில் மீண்டும் சிறைவாசம்
சமயநல்லுார் காளியம்மன் கோயில் தெரு வேலுச்சாமி 84, மனைவி சுந்தரவள்ளி 70. அப்பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். ஜூலை 30 மாலை மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வேலுச்சாமி இரும்பு கம்பியால் மனைவியை தலையில் தாக்கினார். மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று சுந்தரவள்ளி இறந்தார். வேலுச்சாமி மீது சமயநல்லுார் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இவர் ஏற்கனவே கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளிவந்தவர்.
கொலை வழக்கில் கைது
திருமங்கலம்: கூடக்கோவில் சலுான் கடைக்காரர் கருப்பசாமி 35. நேற்று முன்தினம் கல்லணை கண்மாய் கரையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக டி.புதுார் பாலமுருகனை 32, போலீசார் கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு பாலமுருகன் முடி வெட்ட கருப்பசாமி கடைக்கு சென்றபோது குடிபோதையில் இருந்ததால் முடிவெட்ட கருப்பசாமி மறுத்ததால் முன் விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை கல்லணை கண்மாயில் மீன் பிடிப்பதற்காக டூவீலரில் கருப்பசாமி சென்று உள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த பாலமுருகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இருதரப்பு மோதல்: மூவர் கைது
வாடிப்பட்டி: மேட்டுநீரேத்தானில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த ஆதரவு, எதிர்ப்பு என இருதரப்பிடையே முன்விரோதம் இருந்தது. இதில் ஒரு தரப்பினர் செப்.,1 காலை கட்டை, கற்களால் தாக்கியதில் மற்றொரு தரப்பை சேர்ந்த சடையாண்டி, ராமச்சந்திரன், சூர்யா உள்ளிட்டோர் காயமடைந்தனர், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக சரத்குமார் 30, பழனிக்குமார் 34, மகேந்திரனை 34, போலீசார் கைது செய்து மற்றவர்களை தேடுகின்றனர்.