ADDED : ஆக 05, 2025 04:24 AM

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில் அருகே மரங்கள் அகற்றப்பட்டன.
இங்கு ரூ.347.47 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. முதற்கட்டமாக கிழக்குப் பகுதியில் டூவீலர் பார்க்கிங், பொருட்கள் பாதுகாப்பு அறை கட்டி முடிந்து பயன்பாட்டில் உள்ளன. மேற்கு நுழைவு வாயிலில் வாகன பார்க்கிங் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
பார்சல்களுக்கென பிரத்யேக 'லிப்ட்' அமைக்கும் பணிகள் பார்சல் அலுவலகம் அருகே நடக்கின்றன. அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் 130 அடி அகல, குளிரூட்டப்பட்ட 'ஏர் கான்கோர்ஸ்' எனப்படும் நடைமேடை அமைய உள்ளது. இதற்காக 7வது நடைமேடையில் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இதன் காரணமாக அப்பகுதியில் பல ஆண்டுகளாக நிழல் தந்த வேம்பு, புங்கை உள்ளிட்ட 6 மரங்கள் வெட்டப்பட்டன.
ரயில்வே தரப்பில் கூறுகையில், ''மறுசீரமைப்பு பணிகளின் ஒருபகுதியாக மரங்கள் அகற்றப்பட்டன. இதற்கு பதில் ரயில்வே காலனியில் 'மியாவாக்கி' எனும் குறுகிய நிலத்தில் அடர்ந்த காடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன'' என்றனர்.

