/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முன்னாள் பி.எஸ்.எப்., வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்; பங்காளிகள் சண்டையில் ஆவேசம்
/
முன்னாள் பி.எஸ்.எப்., வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்; பங்காளிகள் சண்டையில் ஆவேசம்
முன்னாள் பி.எஸ்.எப்., வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்; பங்காளிகள் சண்டையில் ஆவேசம்
முன்னாள் பி.எஸ்.எப்., வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்; பங்காளிகள் சண்டையில் ஆவேசம்
ADDED : மே 18, 2025 10:57 PM

திருமங்கலம் : மதுரைமாவட்டம் திருமங்கலம் அருகே குடும்ப சண்டையில் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட இருவரை கொல்ல முயன்றதாக, முன்னாள் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) வீரர் மாரிச்சாமியை 40, போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம் கூடக்கோவில் அருகே பாறைக்குளத்தைச் சேர்ந்த முத்து, இவரது தம்பி கருணாநிதி. முத்துவுக்கு மருதுபாண்டி 45, உதயகுமார் 40, மணிகண்டன் 36, என மூன்று மகன்கள் உள்ளனர். கருணாநிதிக்கு மாரிச்சாமி 40, என்ற மகன் உள்ளார். மாரிச்சாமி ஜம்முகாஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி, 2 ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வில் ஊருக்கு வந்துள்ளார்.
தம்பதியிடையே தகராறு
மருதுபாண்டி சகோதரர்களுக்கும், மாரிச்சாமிக்கும் இடையே கொடுக்கல், வாங்கல், சொத்து பிரச்னை இருந்துள்ளது. அனைவரும் பாறைக்குளத்தில் அருகருகே வசிக்கின்றனர். நேற்று காலை மணிகண்டனுக்கும், அவரது மனைவி மல்லிகாதேவிக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இருவரும் வீட்டு வாசலில் நின்று சண்டை போட்டனர்.
அப்போது தனது வீட்டுக்குள் இருந்த மாரிச்சாமி, வெளியில் வந்தார். தன்னைத்தான் பெரியப்பா மகன் மணிகண்டன் திட்டுகிறான் எனக்கூறி அவருடன் சண்டை போட்டார். இதையடுத்து தம்பதியர் சண்டை, பங்காளிகள் சண்டையாக மாறியது. அங்கு வந்த மணிகண்டனின் சகோதரர்கள் உதயகுமார், மருதுபாண்டி ஆகியோர் தகராறை தடுத்துள்ளனர்.
சரமாரி துப்பாக்கிச்சூடு
அனைவரும் ஒன்று சேர்ந்து தன்னோடு தகராறு செய்கிறார்கள் என்று கருதிய மாரிச்சாமி, ஆத்திரத்துடன் வீட்டுக்குள் சென்றார். அங்கிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்து அனைவரையும் மிரட்டி உள்ளார். ஆத்திரம் அடங்காமல் சரமாரியாக அவர் சுட்டதில் உதயகுமாரின் விலா மற்றும் வயிறு பகுதியில் 2 குண்டுகள் பாய்ந்தன. ஒரு குண்டு வெடிக்காமல் கீழே விழுந்தது. ஒரு குண்டு வானை நோக்கி பாய்ந்தது. மற்றொரு குண்டு வீட்டுச் சுவரில் பட்டுத் தெறித்து அருகில் இருந்த கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பாறைக்குளம் கிஷோர் 12, என்ற சிறுவனின் இடது தோளில் பட்டு காயம் ஏற்படுத்தியது.
தப்பி ஓடிய மணிகண்டன் துப்பாக்கி சூடு குறித்து அவசர போலீஸ் எண் 100க்கு தகவல் தெரிவித்தார். கூடக்கோவில் போலீசார் மாரிச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி, 40க்கும் மேற்பட்ட தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
காயமடைந்த உதயகுமார், சிறுவன் கிஷோருக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாரிச்சாமி துப்பாக்கியை எங்கு வாங்கினார், அதற்கான உரிமம் உள்ளதா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.