/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமெரிக்கன் கல்லுாரிக்கு இரண்டு முதல்வர்கள்
/
அமெரிக்கன் கல்லுாரிக்கு இரண்டு முதல்வர்கள்
ADDED : ஜூன் 05, 2025 01:28 AM
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரி முதல்வராக பேராசிரியர் பால் ஜெயகரை கல்லுாரி நிர்வாகம் நியமித்துள்ளது. ஏற்கனவே கல்லுாரிக் கல்வி சார்பில் கண்ணபிரான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பொறுப்பு வகித்த தவமணி கிறிஸ்டோபர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை துவக்கிய நிலையில் மே 30ல் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவருக்கு பதில் கல்லுாரிக் கல்வி கமிஷனர் சுந்தரவள்ளி உத்தரவின்பேரில் மூத்த பேராசிரியர் கண்ணபிரான் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கல்லுாரி நிர்வாகம் சார்பிலும் பால் ஜெயகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்லுாரிக் கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இக்கல்லுாரியில் அரசு உதவிபெறும் படிப்புகள் உள்ளன. அதுசார்ந்த படிப்புகள், ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்குவது உட்பட நிர்வாகம் சார்ந்த பணிகளுக்கு கல்லுாரிக் கல்வி கமிஷனர் நியமித்த முதல்வர் கையெழுத்திட்ட ஆவணங்கள் தான் ஏற்கப்படும்.
இதே கல்லுாரியில் சுயநிதிப் பிரிவு படிப்புகளும் உள்ளன. மைனாரிட்டி கல்லுாரி என்பதால் அதற்கான விதிப்படி கல்லுாரி நிர்வாகம் முதல்வரை நியமிக்க முடியும். அந்த நியமனத்திற்கு சம்பந்தப்பட்ட பல்கலை வழியாக உரிய அனுமதி பெற்று கல்லுாரிக் கல்வி கமிஷனருக்கு விண்ணப்பித்தால் அதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என்றார்.