/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பவன்கல்யாண் போல நல்ல முடிவு எடுங்கள் விஜய்' : ஆலோசனை சொல்கிறார் உதயகுமார்
/
'பவன்கல்யாண் போல நல்ல முடிவு எடுங்கள் விஜய்' : ஆலோசனை சொல்கிறார் உதயகுமார்
'பவன்கல்யாண் போல நல்ல முடிவு எடுங்கள் விஜய்' : ஆலோசனை சொல்கிறார் உதயகுமார்
'பவன்கல்யாண் போல நல்ல முடிவு எடுங்கள் விஜய்' : ஆலோசனை சொல்கிறார் உதயகுமார்
ADDED : அக் 22, 2025 08:13 AM
மதுரை: சிரஞ்சீவி போல் அல்லாமல் பவன்கல்யாண் போல் நல்ல முடிவு எடுங்கள், விஜய். அதற்கான சரியான நேரம் இது தான். அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை தான் த.வெ.க., தொண்டர்கள் விரும்புகின்றனர் என அ.தி.மு.க., எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
தி.மு.க., அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. தைவானின் பாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ராஜா தெரிவித்தனர். ஆனால் அந்நிறுவனம் தமிழகத்தில் முதலீடு ஏதும் செய்யவில்லை. 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்' என்பது போல் தி.மு.க.,வின் புளுகுவை அந்த நிறுவனம் அம்பலப்படுத்தி விட்டது.
ஏ.ஐ.தொழில்நுட்ப நிறுவனத்தை கூகுள் நிறுவனம் ஆந்திராவில் அமைத்துள்ளது. கூகுளின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். அவரிடம் முறையாக அனுமதி கேட்டிருந்தால் அந்த நிறுவனம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருக்கும். ஆனால் தமிழக அரசு கோட்டை விட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தேனியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒரு அமைச்சர் கூட அங்கு செல்லவில்லை. 2022- 2023 பட்ஜெட்டில் வானிலை கண்காணிப்பு கருவி வாங்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது. அது வாங்கப்பட்டதா என தகவல் இல்லை. வடகிழக்கு பருவமழையில் அரசு இயந்திரம் துாங்குகிறது.
நேர்மைக்கு பஞ்சமா தமிழகத்தில் 75 ஆண்டுகள் கொண்ட பெரிய கட்சி என்ற பெருமை கொண்ட தி.மு.க.,வால்மதுரையில் ஒரு நேர்மையான நபரை மேயராக நியமிக்கமுடியவில்லை. அந்த கட்சியில் நேர்மையானவர்கள் இல்லையா. 4 கவுன்சிலர்களை கொண்ட மார்க். கம்யூ., தான் தற்போது மதுரையை நிர்வாகம் செய்கிறது. மேயரை நியமித்தால் தானே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முடியும். மேயரை கூட நியமிக்க முடியாமல் தி.மு.க., முடங்கிவிட்டது என்பது தான் உண்மை.
தற்போது தி.மு.க.,வின் பலம் கூட்டணி தான். ஸ்டாலினே இதை திரும்ப திரும்ப கூறி வருகிறார். எனவே தி.மு.க.,வை வீழ்த்த நினைக்கும் சக்திகள் பழனிசாமி பின்னால் அணிவகுக்க வேண்டும்.
கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி துவங்கி, சரியான முடிவு எடுக்க தவறினார். ஆனால் பவன்கல்யாண் சரியான முடிவு எடுத்ததால் ஆந்திரதுணை முதல்வராக உள்ளார்.
தற்போது விஜய் சரியான முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான் பவன்கல்யாண் போல் ஜெயிக்க முடியும். அ.தி.மு.க.,வுடன் அவர் பயணம் செய்யவே அவரது கட்சி தொண்டர்களும் விரும்புகின்றனர். ஒன்றிணைந்தால் தி.மு.க.,வை வீழ்த்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.