/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழனிசாமியின் பயணத்தால் ஸ்டாலினுக்கு குளிர்காய்ச்சல் உதயகுமார் விமர்சனம்
/
பழனிசாமியின் பயணத்தால் ஸ்டாலினுக்கு குளிர்காய்ச்சல் உதயகுமார் விமர்சனம்
பழனிசாமியின் பயணத்தால் ஸ்டாலினுக்கு குளிர்காய்ச்சல் உதயகுமார் விமர்சனம்
பழனிசாமியின் பயணத்தால் ஸ்டாலினுக்கு குளிர்காய்ச்சல் உதயகுமார் விமர்சனம்
ADDED : ஆக 11, 2025 04:52 AM
மதுரை: ''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தால்முதல்வர் ஸ்டாலினுக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது'' என சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் விமர்சனம் செய்தார்.
அவர் கூறியதாவது:
உசிலம்பட்டி பகுதியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்தில் ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியில் அதன் மதிப்பீடை உயர்த்தி ரூ.93 கோடி ஒதுக்கீடு செய்து மிக நீளமான 1.4 கி.மீ., தொட்டி பாலம் உட்பட 27.6 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்கப்பட்டது.
இப்பகுதியில் 925 எக்டேர் நிலங்களிலும் 2 போக நெல் விளையும் பூமியாக மாறியது. தற்போது வைகை அணையில் 69 அடிக்கு மேல் நீர் இருந்தும் இதில் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் வேளாண் பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இக்கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் நான்காம் கட்ட சுற்றுப்பயணம் செப்டம்பரில் மதுரையில் நடக்க உள்ளது. மதுரை மாவட்டத்திற்கு ஸ்டாலின் அரசு எந்த திட்டங்களும் செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் வைகை நதி சுருங்குவதை தடுக்க இரு கரைகளிலும் சாலை அமைக்கப்பட்டது.
இந்த நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டங்கள் கொண்டு வந்தபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பின் தி.மு.க., அரசு அதனை கைவிட்டுள்ளது. எழுச்சிப் பயணத்தில் பழனிசாமி யாரையும் தவறாக பேசவில்லை. ஆதாரத்துடன்தான் பேசுகிறார். அவரது பயணத்தை குறைவாக மதிப்பீடு செய்த ஸ்டாலினுக்கு இன்று குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது .
ஸ்டாலின் பலஇடங்களில் நடத்திய ரோடு ஷோ காற்று வாங்கியது. அவரது ரோடு ஷோ மேஜிக் ஷோ. ஆனால் பழனிசாமி நடத்துவது ரியல் ஷோ. மறைந்தாலும் மக்களின் உள்ளங்களில் தெய்வமாக வாழும் எம்.ஜி.ஆர்., குறித்து திருமாவளவன் பேசியது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க., ஆட்சியில் நடந்த தேர்தல்களில் தில்லு முல்லு நடந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் தான் இறந்தவர்கள் கூட ஓட்டளிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தலை கண்டித்து நீதிமன்றமே அத்தேர்தலை ரத்து செய்து மீண்டும் நடத்தியது. அ.தி.மு.க., 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் தமிழகம் பல்வேறு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அ.தி.மு.க.,வின் பத்தாண்டு கால கட்டமைப்புக்கு இன்று ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.