/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'விவாதிக்க எந்த இடத்திற்கு அழைத்தாலும் வரத்தயார்' உதயநிதிக்கு உதயகுமார் பதிலடி
/
'விவாதிக்க எந்த இடத்திற்கு அழைத்தாலும் வரத்தயார்' உதயநிதிக்கு உதயகுமார் பதிலடி
'விவாதிக்க எந்த இடத்திற்கு அழைத்தாலும் வரத்தயார்' உதயநிதிக்கு உதயகுமார் பதிலடி
'விவாதிக்க எந்த இடத்திற்கு அழைத்தாலும் வரத்தயார்' உதயநிதிக்கு உதயகுமார் பதிலடி
ADDED : நவ 13, 2024 04:19 AM
மதுரை : ''உங்களுடன் விவாதிக்க எந்த இடத்திற்கு அழைத்தாலும் வரத்தயார். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு சவால் விடும் அளவிற்கு துணை முதல்வர் உதயநிதிக்கு தகுதி, அனுபவம் வரவில்லை,'' என மதுரையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டங்கள்தோறும் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஷூட், ரோடு ஷோ நடத்துகிறார். இது மக்களுக்கு பலன் தரவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்விகளை முன் வைத்தார். அதை கவனத்தில் எடுத்து செயல்படுத்த வேண்டுமே தவிர எள்ளி நகையாடுவது, நாகரீக அரசியலுக்கு ஏற்றதல்ல. பழனிசாமி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு கூறுகிறார். ஆனால் 'பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்,' என மக்களை திசை திருப்புவதில் அக்கறை செலுத்துகிறார்களே தவிர, தீர்வு காண அக்கறை செலுத்தவில்லை.
மேலும் முதல்வர் ஸ்டாலின், 'உங்களுக்கு என்ன திறமை இருக்கிறது,' என பழனிசாமியை நோக்கி தரம் தாழ்ந்த கேள்வியை கேட்கிறார். பழனிசாமி நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை புள்ளி விபரத்துடன் வரிசைப்படுத்தி என்னால் துண்டு சீட்டு, குறிப்பு இல்லாமல் பேச முடியும். ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களை பேசத் தயாரா என சவால் விடுத்தார். அவருக்கு உதயநிதி சவால் விடுகிறார். இரண்டு கோடி தொண்டர்கள் சார்பில் உதயநிதிக்கு சவால் விடுகிறேன். ஸ்டாலின் மகனான உங்களோடு விவாதிக்க எந்த இடத்திற்கு அழைத்தாலும் நாங்கள் வரத்தயார்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள் கடத்தல், மின் கட்டணம், சொத்துவரி உயர்வு என மக்கள் வடிக்கும் கண்ணீரை துடைக்க நீங்கள் முயற்சி எடுக்கவில்லை.
கருணாநிதிக்கு மகனாக பிறந்த காரணத்தால் உங்கள் தந்தை முதல்வர், கருணாநிதியின் பேரனாக பிறந்த ஒரே காரணத்தினாலே நீங்கள் துணை முதல்வராகி சவால் விடுக்கிறீர்கள். இந்நிலை இல்லாவிடில் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட நீங்கள் வெற்றி பெற முடியாது. பழனிசாமிக்கு சவால் விடும் அளவிற்கு உதயநிதிக்கு தகுதி, அனுபவம் வரவில்லை என்றார்.