/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென் மாவட்டங்களில் உதயநிதி சுற்றுப்பயணம்
/
தென் மாவட்டங்களில் உதயநிதி சுற்றுப்பயணம்
ADDED : ஆக 27, 2025 07:39 AM
மதுரை: மதுரை த.வெ.க., இரண்டாவது மாநில மாநாடு, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணத்தை அடுத்து தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதியும் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார்.
இதில், த.வெ.க., மாநாட்டில் விஜய்யின் 'அங்கிள்' விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பதுடன், எய்ம்ஸ் பணிகள் தாமதமாவதை குறிப்பிடும் வகையில் 2021 சட்டசபை தேர்தலில் செங்கலை காண்பித்து அரசியலில் கலகலக்க வைத்தது போல் மத்திய அரசை விமர்சிக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. அனைத்து கட்சி தலைவர்களும் சுற்றுப்பயணம், மாநாடு, கூட்டங்கள் என 'பிஸி'யாகி விட்டனர். அரசியல் ரீதியானதை தாண்டி தனிமனித விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக மதுரையில் ஆக.,21ல் நடந்த த.வெ.க., மாநாட்டில் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த அக்கட்சி தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினை 'அங்கிள்' என குறிப்பிட்டு 'வாட் அங்கிள்', 'ராங் அங்கிள்' என பேசியது தி.மு.க.,வை 'டென்ஷன்' ஆக்கியுள்ளது. அதுபோல் மாநாடு நடத்த தி.மு.க., பல்வேறு தடைகள் செய்தது, சேர்கள் வழங்கும் ஒப்பந்ததாரர்களை மிரட்டியது என மாநாட்டில் அமைச்சர் மூர்த்தி மீது ஆதவ்அர்ஜூன் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
அதற்கு 'தி.மு.க., ஒருபோது இதுபோன்ற இழிவான செயலை செய்யாது. அரசியலுக்காக பேசக்கூடாது' என அமைச்சர் மூர்த்தியும் சூடாக பதில் கொடுத்தார். ஆனாலும் 'அங்கிள்' விமர்சனத்தை தி.மு.க.,வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை வெளிப்படுத்த முடியாத நிலையில், அமைச்சர் நேரு, 'தேர்தல் நேரத்தில் அவருக்கு நாங்களும் நல்லா பதில் சொல்லுவோம்' என சூசக எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்நிலையில் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற அ.தி.மு.க., சுற்றுப்பயணத்தை தென் மாவட்டங்களில் முடித்துவிட்டு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி செப்., 1 முதல் மதுரை தொகுதிகளில் நான்கு நாட்கள் முகாமிடுகிறார். மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேடு உட்பட பல்வேறு விஷயங்களை கிளப்ப திட்டமிட்டுள்ளார். அதற்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில் உதயநிதியின் சுற்றுப்பயணத்தை அமைக்க தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.
'எய்ம்ஸ் செங்கல்' போல் கலகலக்க திட்டம் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: விஜய் ஒவ்வொரு முறையும் பேசும்போது முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்பதை மறக்காமல் குறிப்பிடுகிறார். ஆனால் அவருக்கு பதில் கொடுத்து பெரிய ஆளாக்க தலைமை விரும்பவில்லை. ஆனாலும் தி.மு.க.,வை விமர்சிப்பதிலேயே விஜய் குறியாக உள்ளார்.
உதயநிதி சுற்றுப்பயணத்தில் விஜய்க்கு வலுவான பதில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விஜய்க்கு இளைஞர்கள் கூட்டம் உள்ளதாக தெரிகிறது. அதற்கு 'செக்' வைக்கும் வகையில், அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பயணம் அல்லது அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை என அனைத்து இளைஞர்களை கவரும் வகையில் புதிய திட்டங்களை தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில் உதயநிதி அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே 13 லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கு 'லேப்டாப்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் உதயநிதியின் சுற்றுப்பயணம் இருக்கும். அதுபோல் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் நுாதன திட்டமும் தயாராகிறது என்றனர்.