/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேகாத வெண் பொங்கல், கெட்டியான குஸ்கா; மதுரையில் தவித்து போன விளையாட்டு வீராங்கனையர்
/
வேகாத வெண் பொங்கல், கெட்டியான குஸ்கா; மதுரையில் தவித்து போன விளையாட்டு வீராங்கனையர்
வேகாத வெண் பொங்கல், கெட்டியான குஸ்கா; மதுரையில் தவித்து போன விளையாட்டு வீராங்கனையர்
வேகாத வெண் பொங்கல், கெட்டியான குஸ்கா; மதுரையில் தவித்து போன விளையாட்டு வீராங்கனையர்
ADDED : ஜன 07, 2025 12:45 AM

மதுரை; தமிழகத்தில், 17 வயது பிரிவினருக்கான குடியரசு தினவிழா குழு விளையாட்டுப் போட்டிகளை நடத்த, மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 38 மாவட்டங்களை சேர்ந்த வாலிபால், கால்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னிஸ் போட்டிகளுக்கான ஆடவர், மகளிர் அணியினர், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தனர்.
குளிரும், பனியும்
மகளிருக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள கே.ஏ.சி.ஏ.அருணாச்சல நாடார் பள்ளியில் தங்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது.
மதுரை டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடந்த கால்பந்து, வாலிபால் போட்டிகளின் போது காலை, மதியம் இருவேளை உணவும் மோசமாக இருந்ததாக மாணவியர், உடற் கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
அவர்கள் கூறியதாவது:
தங்கியிருந்த பள்ளியின் வகுப்பறையில் இரண்டு பெரிய ஜன்னல்கள், கதவில் இரும்பு கம்பிகள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தன.
மரக்கதவுகள் இல்லாததால் இரவு முழுதும் திறந்தவெளி கதவு, ஜன்னல் வழியாக பனிக்காற்று வீசி துாக்கமின்றி பாதிக்கப்பட்டோம்.
போர்வை, கம்பளியை தாண்டி குளிரை தடுக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஆண்டு முழுக்க பயிற்சி பெற்று, மாநிலப் போட்டியில் பங்கேற்கும் நேரத்தில் குளிரும், பனியும் எங்கள் விளையாட்டுத் திறனை முடக்கியது கஷ்டமாக இருந்தது. கழிப்பறை வசதியும் சரியில்லாததால் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
கீழ்தளம் முழுதும் நிறைய கேமராக்கள் உள்ளதால் உடை மாற்றுவது கூட சிரமமாக இருந்தது. டி.வி.எஸ்.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலையில் போட்டி துவங்குவதற்கு முன்பாக காலை உணவு வழங்கப்பட்டது.
களி உருண்டை
வெண் பொங்கல் அரைவேக்காடாக, அரிசியாக இருந்தது. போட்டிகளுக்கு நேரமானதால் புகார் செய்யவும் நேரமின்றி பிரெட், பன் வாங்கி சாப்பிட்டு விளையாடச் சென்றோம்.
காலையில் வைத்த வேகாத வெண் பொங்கலை ஈடுகட்டும் வகையில், மதியம் குஸ்காவை குழைய வைத்து களி உருண்டை போல தந்தனர்.
அதையும் சாப்பிட முடியவில்லை. இரண்டு வேளையும் உணவு சரியில்லாததால் கைப்பணத்தை செலவு செய்து, ஹோட்டலில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த போட்டிகளில் பங்கேற்க, 2000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோனோருக்கு அவதி ஏற்பட்டது.
இதே நிலை தான், மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளிலும் ஏற்பட்டது. 1,200க்கும் மேற்பட்ட மாணவியர் பாதிக்கப்பட்டனர்.

