/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிறைவேறாத பணி நிரந்தர வாக்குறுதி * சங்க பொது செயலாளர் வேதனை
/
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிறைவேறாத பணி நிரந்தர வாக்குறுதி * சங்க பொது செயலாளர் வேதனை
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிறைவேறாத பணி நிரந்தர வாக்குறுதி * சங்க பொது செயலாளர் வேதனை
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிறைவேறாத பணி நிரந்தர வாக்குறுதி * சங்க பொது செயலாளர் வேதனை
ADDED : ஏப் 23, 2025 02:51 AM
திண்டுக்கல்,:''தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் 8 ஆயிரம் பேர் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது,'' என, திண்டுக்கல்லில் தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொது செயலாளர் சுபின் கூறினார்.
அவர் கூறியதாவது: சட்டசபையில் ஏப்., 21ல் நடந்த மருத்துவத்துறை மானிய கோரிக்கையின் போது கொரோனா காலத்தில் பணியில் சேர்ந்த 3184 பேரில் 2160 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்படுகிறது. 714 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய காலி பணியிடங்கள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இடைக்கால பணி நியமனத்தில் வந்தவர்களை நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொரோனாவின் போது பணியில் சேர்ந்து 2022 டிச., 31ல் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மீதமுள்ள 620 பேருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருப்பது அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
2015ல் எம்.ஆர்.பி., தேர்வின் மூலம் ரூ. 7700 தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் இரு ஆண்டுகள் பணி முடித்ததும் நிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 8 ஆண்டுகளாக 8 ஆயிரம் செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாமல் ரூ. 18 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என தெரிவித்தது. நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மருத்துவத்துறையில் 60 சதவீதத்திற்கும் மேல் ஒப்பந்த, தொகுப்பூதியம், அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதால் துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
உண்மைக்கு புறம்பான தகவல்களை அமைச்சர் பொது வெளியில் பேசுவதை தவிர்த்து துறையிலும், ஊழியர்கள் நலனிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டசபை கூட்ட தொடரிலே ஒப்பந்த செவிலியர்கள், பிற ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்றார்.