UPDATED : நவ 11, 2026 06:02 PM
ADDED : நவ 11, 2026 06:00 PM

சமயநல்லுார்: பரவையில் பராமரிப்பின்றி பாழடைந்து வரும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு பெருமாள்கோயில் தெருவில் ரேஷன் கடை அருகே சில ஆண்டுகளுக்கு முன் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆறு மாதங்களாக பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. குழாய்கள் உடைந்தும், குப்பை நிறைந்தும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
பேரூராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாததால் யாரும் பயன்படுத்தாமல் காட்சிப் பொருளாக மாறி வருகிறது.
அப்பகுதியின் செல்லம் கூறியதாவது: பேரூராட்சி முறையாக ஆட்களை வைத்து பராமரிப்பதில்லை. கழிவுநீர் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல வழியின்றி கோப்பை நிரம்புகின்றன. குழாய்கள் உடைந்துள்ளதால் சரியான முறையில் சுத்தம் செய்ய வழியின்றி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் மக்கள் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். பெண்கள் இரவில் மிகுந்த சிரமப்படுகின்றனர். பேரூராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
