/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகப்பேறு வார்டில் கட்டுக்கடங்காத கூட்டம்
/
மகப்பேறு வார்டில் கட்டுக்கடங்காத கூட்டம்
ADDED : ஜூன் 15, 2025 05:16 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டின் முன்புற வராண்டா இருக்கைகளை தாண்டி கூட்டம் நிரம்பி வழிவதோடு, வார்டின் பின்புற ரோட்டில் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பதால் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.
இந்த வார்டில் கர்ப்பிணிகள், பெண்கள் உட்பட தினமும் 200 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். கர்ப்பிணிகள் குழந்தைப் பேறுக்காக அனுமதிக்கப்படும் நிலையில் ஒருவருக்கு 5 பெண் உறவினர்கள், 2 ஆண் உறவினர்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். வார்டின் உட்புறத்தில் காத்திருப்போர் அறை இல்லாததால் வார்டின் சுற்றுச்சுவருக்கு வெளியேயுள்ள இடத்தில் கூட்டமாக அமர்கின்றனர்.
மருத்துவமனையின் முன்புற வாசலில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தாலும் மகப்பேறு வார்டை தாண்டி செல்வதற்கு சிரமம் ஏற்படும். கூட்டமாக அமர்ந்தும் நின்றும் கடந்தும் அந்த இடத்தை எப்போதும் பரபரப்பாக வைக்கின்றனர். அங்கு கூட்டம் நிரம்பி வழி வதால் தற்போது வார்டின் பின்பக்கம் எதிரிலுள்ள ரோட்டோரத்தில் பெண்கள் தரையில் அமர்கின்றனர். ஆண்கள் பாதி ரோட்டை அடைத்து நிற்பதால் டூவீலர்கள் கூட நிதானித்து செல்ல வேண்டியுள்ளது.
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் தொடங்கியுள்ளது. கொரோனா வார்டில் 2 பேர் சிகிச்சையில் உள்ளனர். எனவே கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் மருத்துவமனை நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். ஒரு கர்ப்பிணிக்கு 2 பேர் உதவி என்கிற வகையில் மட்டும் பாஸ் வழங்க வேண்டும்.