/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
58 கிராம கால்வாயில் தண்ணீர் வருவது எப்போது; உசிலம்பட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
58 கிராம கால்வாயில் தண்ணீர் வருவது எப்போது; உசிலம்பட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு
58 கிராம கால்வாயில் தண்ணீர் வருவது எப்போது; உசிலம்பட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு
58 கிராம கால்வாயில் தண்ணீர் வருவது எப்போது; உசிலம்பட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 22, 2025 12:31 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியின் நீராதார திட்டமான 58 கிராம கால்வாயில் கடைசியாக 2023 டிசம்பரில் தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்தண்டு வைகை, பெரியாறு அணைகளில் போதிய நீர் இருந்தும் திறக்கப்படவில்லை. ஆனால் அடுத்தடுத்து கிடைத்த மழை காரணமாகவும், கடந்த முறை கால்வாயில் தண்ணீர் திறந்ததாலும், பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி இருந்ததாலும் உசிலம்பட்டி வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவிற்கு உயர்ந்திருந்தது. கடந்த காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கு கீழ் சென்ற நிலையில் சென்றாண்டு தரைமட்ட கிணறுகளில் இருந்து தண்ணீர் வெளியேறும் அளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
மானாவாரி, தரிசு நிலங்கள் சீரமைப்பு பணிகளும், நெல், கரும்பு, தென்னை விவசாயப்பணிகளும் துவங்கி நடக்கிறது. 2024ல் போதுமான தண்ணீர் மழையால் கிடைத்ததால் விவசாயிகள் கால்வாய் தண்ணீரை கேட்க ஆர்வமின்றி இருந்தனர். இந்தாண்டு பருவமழை தொடர்ந்து கிடைக்காத நிலையில், உசிலம்பட்டி பகுதியில் பெரும்பாலான கண்மாய்கள் வற்றிவிட்டன. நிலத்தடி நீர்மட்டமும் குறையத்துவங்கியது.
சில மாதங்களாகவே, வைகை, பெரியாறு அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால், தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தொடர்ந்து போராடினர். நீர்வளத்துறை அதிகாரிகள், 'எப்போதும் போல் நவம்பர், டிசம்பரில்தான் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்' என பதில் கூறினர். தற்போது பெரியாறு, வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைத்து வரும் கூடுதல் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகள் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க உள்ள வாய்ப்புகள் குறித்து உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தீபாவளிக்கு முன்னரே திறக்க ஏற்பாடு நடந்த நிலையில், தற்போது தீபாவளி முடிந்தும் தண்ணீர் திறக்க உத்தரவு கிடைக்காமல் உள்ளது. ஓரிரு நாட்களில் தண்ணீர் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். உசிலம்பட்டி விவசாயிகளும் தண்ணீர் திறப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.