ADDED : ஆக 13, 2026 02:33 AM

சோழவந்தான்: கருப்பட்டி ஊராட்சி கணேசபுரத்தில் சேதமடைந்த பாசன கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இங்குவைகைப் பெரியாறு கால்வாயில் இருந்து பிரிந்து சோழவந்தான் கண்மாய்க்கு கணேசபுரம் வழியே வடகரை கால்வாய் செல்கிறது. இங்கிருக்கும் பொட்டமடையில் இருந்து பிரியும் மற்றொரு கிளைக்கால்வாய் கருப்பட்டி, இரும்பாடி விவசாய பாசனத்திற்கு பயன்படுகிறது.
இக்கால்வாயின் மீது பாலகிருஷ்ணாபுரம் பிரிவு, கணேசபுரம் ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பாலம் கட்டப்பட்டது. இதனை கட்டி பல ஆண்டுகளாகி விட்டதால், போதுமான பராமரிப்பில்லை. இதனால் பாலத்தின் அடிப்பகுதி உதிர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
கணேசபுரம் கேசவன்: இப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதன் வழியே தினமும் ஏராளமான விவசாய வாகனங்கள் செல்கின்றன.
அம்மச்சியாபுரம், பொம்மன்பட்டி ஆகிய ஊர்களுக்கு செல்வோரும் பயன்படுத்துகின்றனர். வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகளால் பாலத்தின் காரை பெயர்ந்து கம்பிகள் துருப்பிடிக்கின்றன.
பாலத்தின் வலிமை குறைந்து விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
