/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜெ., ஸ்டைலில் தயாராகிறது விஜய் தேர்தல் பிரசார திட்டம்; பெங்களூரு நிறுவனத்திடம் ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம்
/
ஜெ., ஸ்டைலில் தயாராகிறது விஜய் தேர்தல் பிரசார திட்டம்; பெங்களூரு நிறுவனத்திடம் ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம்
ஜெ., ஸ்டைலில் தயாராகிறது விஜய் தேர்தல் பிரசார திட்டம்; பெங்களூரு நிறுவனத்திடம் ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம்
ஜெ., ஸ்டைலில் தயாராகிறது விஜய் தேர்தல் பிரசார திட்டம்; பெங்களூரு நிறுவனத்திடம் ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம்
ADDED : அக் 23, 2025 04:09 AM

மதுரை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல் விமானம், ஹெலிகாப்டரில் பறந்து சென்று தேர்தல் பிரசாரம் செய்யும் வகையில் த.வெ.க., தலைவர் விஜயின் தேர்தல் பிரசார திட்டம் தயாராகிறது. இதற்காக பெங்களூரு நிறுவனம் ஒன்றில் 4 ஹெலிகாப்டர்கள் ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விஜயின் த.வெ.க., வளர்ந்து வருகிறது. கட்சியை துவக்கியவுடன் 2026 சட்டசபை தேர்தல் களத்தில் வெற்றிக்கான 'கூட்டணி கணக்கை' முடிவு செய்யும் வலுவான இடத்திற்கு முன்னேறியுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை பிரசாரம் என்ற புதிய நடைமுறையை பின்பற்றி அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார் விஜய்.
கரூர் சம்பவம் அவருக்கு பின்னடைவாக அமைந்ததால், அமைதியானார். அச்சம்பவத்தை வைத்து சட்டசபை தேர்தல் நேரத்தில் அரசியல் செய்து கட் சியை, ஆளுங்கட்சி முடக்கலாம் என்ற அதிர்ச்சியில் இருந்த விஜய்க்கு, அச்சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் த.வெ.க.வினர் சற்று சுறுசுறுப்பாகினர்.
நீதிமன்ற வழக்குகள், சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா என த.வெ.க., குறித்து அரசியல் ஆய்வாளர்கள் பலர் பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா சத்தமில்லாமல் விஜயின் தேர்தல் பிரசார வியூகத்தை எவ்வாறு மேற்கொள்வது என திட்டமிட்டு வருகிறார்.
இதன்படி நீதிமன்றம் வழிகாட்டுதலில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கிடைத்து மீண்டும் விஜய் பிரசாரத்தை துவக்கினால், அது மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் இருக்கும் என்கின்றனர், அக்கட்சி நிர்வாகிகள்.
இதுகுறித்து த.வெ.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: தொண்டர்கள் கூட்டத்தால் விஜய் வாகனங்களில் சென்று தேர்தல் பிரசாரம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. அதற்கு பாதுகாப்பு கொடுப்பதில் போலீசாரும் திணறுகின்றனர். போலீஸ் போதிய பாதுகாப்பு கொடுக்காததால் தான் கரூரில் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். ஆனால் விஜய் தாமதமாக வந்ததாக காரணம் கூறுகின்றனர்.
இதுவரை நடந்த மாநாடு, பிரசாரக் கூட்டத்தில் நடந்த சம்பவங்களை வைத்து அடுத்து துவங்கவுள்ள பிரசாரம் திட்டமிடப்படும். குறிப்பாக பிரசார வாகனத்தில் சாலைவழியே இனிமேல் விஜய் செல்லப்போவதில்லை. சென்னையில் இருந்து பிரசாரம் நடக்கும் மாவட்டத்திற்கு தனி விமானம் மூலம் சென்று, அங்கிருந்து பிரசாரம் செய்ய வேண்டிய இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் முன்கூட்டியே (அரை மணிநேரம்) செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொண்டர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது இனிமேல் தவிர்க்கப்படும்.
மேலும் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் 4 ஹெலிகாப்படர்களை ஓராண்டு பயன்படுத்த ஆதவ் அர்ஜூனா தரப்பில் இருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விஜய் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கு அவருக்காக ஒரு ஹெலிகாப்டர் அருகில் உள்ள விமான நிலையத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.
இதுதவிர பிரசாரம் செய்யும் இடம் நகருக்கு 'அவுட்டர்' பகுதியாக தேர்வு செய்யப்படும். ஒரு லட்சம் பேர் வசதியாக அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஆதவ் அர்ஜூனா தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.