/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாரம்பரிய நெல் பயிரிடும் விளாச்சேரி விவசாயிகள்
/
பாரம்பரிய நெல் பயிரிடும் விளாச்சேரி விவசாயிகள்
ADDED : ஜன 22, 2025 06:26 AM
திருநகர : மதுரை திருநகர் விளாச்சேரி விவசாயிகள் பாரம்பரிய நெல் வகைகளை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
விளாச்சேரி பகுதியில் மூவாயிரம் ஏக்கருக்கும் மேல் நெல், வாழை, தென்னை பயிரிடப்படுகிறது. சில ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் பாரம்பரிய நெல் வகைகளை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டு நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, துாய மல்லி, பூங்கார் நெல் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.
மற்ற ரக நெல் பயிர்களை காட்டிலும், இந்த பாரம்பரிய நெல் பயிர்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. அதிக மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றாலும் பயிர் அழுகாது.
இந்த வகை அரிசிக்கு சந்தை மதிப்பும் அதிகம். வியாபாரிகள் களத்து மேட்டுக்கே வந்து விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
இயற்கை இடுபொருள்களைக் கொண்டு பராமரிப்பதால் உரச்செலவு குறைவு. முதலில் ஒரு சில விவசாயிகளே குறைந்த அளவில் பாரம்பரிய நெல்லை பயிரிட்டனர். ஆண்டுக்காண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் ஆர்வத்தால் தற்போது நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பாரம்பரிய நெல் பயிரிடப்பட்டுள்ளது.
விளாச்சேரி கிராமத்தை விரைவில் பாரம்பரிய நெல் உற்பத்தி மையமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.