குவாரியால் ‘கரைந்து’ வரும் குன்று 4 கிராம மக்கள் போராட்டம்
குவாரியால் ‘கரைந்து’ வரும் குன்று 4 கிராம மக்கள் போராட்டம்
ADDED : ஆக 13, 2026 04:11 PM
எழுமலை: எழுமலை அருகே சங்கரலிங்காபுரம் ஓணான் கரட்டில் கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி 4 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரையூர் தாலுகா பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி சங்கரலிங்காபுரம் ஓணான் கரடு என்ற சிறு குன்று உள்ளது. சுற்றுவட்டார நீர் நிலைகளுக்கு நீராதாரமாகவும், சிறு விலங்குகளின் வாழ்விடமாகவும் இருந்து வந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து குன்றின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் சிறு உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதனால் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்பிநாயக்கன்பட்டி, சங்கரலிங்காபுரம், டி.ராமநாதபுரம், செல்லாயிபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து குவாரி அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆந்திரா தனியார் நிறுவனத்திற்கு ரகசியமாக கனிமவளத் துறை அனுமதி வழங்கியது. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் நேற்று வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். குவாரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யாவிட்டால் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிடுவோம்’ என எச்சரித்தனர்.
