/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள மின்சார கட்டணத்தையும் வழங்குங்க தலைமையாசிரியர்கள் போர்க்கொடி
/
அரசு பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள மின்சார கட்டணத்தையும் வழங்குங்க தலைமையாசிரியர்கள் போர்க்கொடி
அரசு பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள மின்சார கட்டணத்தையும் வழங்குங்க தலைமையாசிரியர்கள் போர்க்கொடி
அரசு பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள மின்சார கட்டணத்தையும் வழங்குங்க தலைமையாசிரியர்கள் போர்க்கொடி
ADDED : டிச 25, 2024 05:25 AM
மதுரை : தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய இணையதள சேவை கட்டணத்திற்கான நிதி விடுவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக மின்சார கட்டணத்தையும் வழங்க கல்வித்துறை முன்வர வேண்டும் என தலைமையாசிரியர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
மாநிலத்தில் அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் 'இன்டர்நெட்' வசதியுடன் செயல்படும் ஹைடெக் லேப்களுக்கு செலுத்த வேண்டிய இணையதள சேவை கட்டணம் நிலுவையில் இருந்தது. இக்கட்டணத்தை சமக்ர சிக் ஷா திட்டம் சார்பில் பி.எஸ்.என்.எல்.,க்கு செலுத்த வேண்டும். ஆனால் மாநில அளவில் 3700 பள்ளிகள் இக்கட்டணத்தை செலுத்தவில்லை. இதனால் ரூ.1.5 கோடி நிலுவை சேர்ந்தது. இதையடுத்து இத்தொகையை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், 'கல்வித்துறைக்கு ஒதுக்கிய நிதி எங்கே செல்கிறது' என கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தியும் வெளியானது. இதையடுத்து பள்ளிகளுக்கான நிலுவை இணையதள சேவை கட்டணத்திற்கான நிதியை தமிழக அரசு விடுவித்தது. ஆனால் நேற்றுவரை தலைமையாசிரியர்களுக்கு சென்றடையவில்லை. இந்நிலையில், அரசு பள்ளிகளுக்கும் மின்சார கட்டணமும் ரூ.கோடிக்கணக்கில் வழக்காமல் பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் சொன்னது என்னாச்சு
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: இணையதள சேவை கட்டணம் போல் பள்ளிகளுக்கான மின்சார கட்டணத்தையும் நாங்கள் சொந்த பணத்தை செலுத்தி விட்டு பின் அரசிடமிருந்து எதிர்பார்த்து காத்திருப்போம். இத்தொகை ஆண்டு துவக்கத்தில் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வழங்கப்படும்.
அதன் பின் மார்ச்சில் ஒரு தொகை வழங்கப்படும். ஆனால் மின் கட்டணம் அதை விட அதிகமாக தான் செலுத்த வேண்டி வரும். அத்தொகை தலைமையாசிரியர் 'தலையில்' தான் விழுகிறது. இவ்வகையில் ரூ. கோடிக்கணக்கில் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளது.
தொடக்க கல்வியில், ஒரு வட்டாரக் கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) அவருக்கு கீழ் உள்ள நுாற்றுக்கணக்கான பள்ளிகளுக்கும் மின் கட்டணம்செலுத்துகிறார். அதாவது ஒவ்வொரு ஆண்டும் சில்லரை செலவினம் என்ற பெயரில் அனைத்து பள்ளிக்கான தொகையும் பி.இ.ஓ., விற்கு வழங்கப்படுகிறது. இதனால் மின் கட்டணம் தடையின்றி செலுத்தப்படுகிறது.
ஆனால் உயர், மேல்நிலையில் அந்தந்த தலைமையாசிரியர் செலுத்தி பின் அரசிடம் பெற வேண்டிய வகையில் உள்ளது. 'இதை அரசே செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் மகேஷ் சில மாதங்களுக்கு முன் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக பள்ளிகளில் மின் இணைப்பு எண்கள் கணக்கெடுக்கப்பட்டன. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே தொடக்க கல்வி போல் உயர், மேல் நிலையிலும் டி.இ.ஓ.,க்கள் மூலம் மின்கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.