/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்ரீவி., ஆண்டாள் சன்னிதியில் இளையராஜா அவமதிக்கப்பட்டாரா? அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் விளக்கம்
/
ஸ்ரீவி., ஆண்டாள் சன்னிதியில் இளையராஜா அவமதிக்கப்பட்டாரா? அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் விளக்கம்
ஸ்ரீவி., ஆண்டாள் சன்னிதியில் இளையராஜா அவமதிக்கப்பட்டாரா? அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் விளக்கம்
ஸ்ரீவி., ஆண்டாள் சன்னிதியில் இளையராஜா அவமதிக்கப்பட்டாரா? அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் விளக்கம்
ADDED : டிச 17, 2024 07:33 AM
மதுரை; 'விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் சன்னிதியில் இசையமைப்பாளர் இளையராஜா அவமதிக்கப்படவில்லை' என, மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விளக்கம் அளித்துள்ளார்.
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஆண்டாள் கோவிலுக்கு டிச., 15ல் ஹைதராபாத் திரிதண்டி நாராயண சின்ன ராமானுஜ ஜீயருடன், இசையமைப்பாளர் இளையராஜா தரிசனம் செய்ய வந்தார்.
மூலவர் கருவறையில் ஆண்டாள் ரங்கமன்னார், கருடாழ்வாரும், கருவறை அடுத்த அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர்.
இந்நிலையில், அர்த்த மண்டபத்தில் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து, அறநிலையத்துறையிடம் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் விளக்கம் கேட்டார்.
மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை அளித்துள்ள விளக்கம்:
கோவில் மரபு படியும், பழக்க வழக்கப்படியும் அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் தவிர மற்றவர்கள் செல்வதில்லை.
ராமானுஜ ஜீயருடன் இளையராஜா இணைந்து அர்த்த மண்டபத்தின் வாசல்படி ஏறிய போது, ஜீயர் சுவாமிகள் மற்றும் கோவில் மணியம் ஆகியோர், 'அர்த்த மண்டபம் முன்பிருந்து சுவாமி தரிசனம் செய்யலாம்' என்றனர்.
இளையராஜாவும் ஒப்புக்கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பிருந்து தரிசனம் செய்தார். ராமானுஜ ஜீயர் மட்டும், அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று தரிசனம் செய்தார்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
ஜீயருடன் வந்த பின்னணி
இளையராஜா கடந்த ஜூனில் ஒரு அறக்கட்டளை ஏற்பாட்டில், 12 ஆழ்வார்களால் எழுதப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் 4,000 பாசுரங்களில் இருந்து எட்டு பாசுரங்களை தேர்வு செய்து, இசையமைத்து ஆல்பமாக வெளியிட்டார்.
அதை இளையராஜா வெளியிட, திரிதண்டி ராமானுஜ ஜீயர் பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய இளையராஜா, 'திருவாசகத்திற்கு பிறகு நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு இசை அமைக்க பலர் விரும்பி கேட்டனர். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உண்டு. இதுவும் சரியான நேரத்தில் நடந்துள்ளது' என்றார்.
ஜீயர் பேசுகையில், 'இளையராஜா அழகாக இசையை சேர்த்து உலகிற்கு அர்ப்பணித்துள்ளார். அவரது பக்தி, அர்ப்பணிப்பு, தொண்டு மனப்பான்மையால் ஈர்க்கப்பட்டோம்' என, பாராட்டினார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஜீயருடன் இளையராஜா நட்பு பாராட்டி வந்தார். ஜீயர் அழைப்பின்படி, அவருடன் ஸ்ரீவி., வந்து இளையராஜா தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.