ADDED : ஆக 31, 2025 04:58 AM
சோழவந்தான்: சோழவந்தான் அருகே நாராயணபுரம் வழியே செல்லும் பாசன கால்வாய் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தென்கரைக் கண்மாய் நிரம்பி வெளியேறும் கழிவு நீர் இக்கால்வாய் வழியே சென்று வைகை ஆற்றில் கலக்கும். தென்கரைக் கண்மாய் அரிதாகவே நிரம்பும். இதனால் இக்கால்வாயில் தண்ணீர் சென்று பல ஆண்டுகள் ஆகிறது.
மேட்டுப்பகுதி கால்வாயாக இருப்பதால் அவ்வப்போது பெய்யும் மழை நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. நாராயணபுரத்தில் கால்வாயின் மேல் அமைந்துள்ள பாலத்தின் அருகே பிளாஸ்டிக் கழிவுகள், ஆகாயத் தாமரைகள் செடி, கொடிகள் கால்வாயை ஆக்கிரமித்துள்ளன.
இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி கழிவு நீராக மாறியுள்ளது. துர்நாற்றம் வீசி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை சீரமைக்க வேண்டும்.

