/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோவில்பாப்பாகுடி கண்மாய் மடையை திறந்த சமூகவிரோதிகள் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
/
கோவில்பாப்பாகுடி கண்மாய் மடையை திறந்த சமூகவிரோதிகள் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
கோவில்பாப்பாகுடி கண்மாய் மடையை திறந்த சமூகவிரோதிகள் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
கோவில்பாப்பாகுடி கண்மாய் மடையை திறந்த சமூகவிரோதிகள் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
ADDED : ஜன 20, 2025 05:35 AM

மதுரை: மதுரை கோவில் பாப்பாகுடி கண்மாயின் மடையை சமூக விரோதிகள் வேண்டுமென்றே திறந்து விட்டதால் அப்பகுதி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
பெரியாறு பிரதான கால்வாயின் 3வது கிளை கால்வாய் வழியாக கோவில் பாப்பாகுடி கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்கிறது. இதற்கு ஆறு மடைகள் உள்ளன. கண்மாய் நிறைந்தால் உபரிநீர் விளாங்குடி கண்மாய்க்கு செல்லும். மற்றொரு மடை வழியாக உபரிநீர் வைகையாற்றுக்கு செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்கால் துார்வாரப்படாமல் செடி, கொடிகளின் குப்பை அடைத்துள்ளதாலும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள மடையை வேண்டுமென்றே சிலர் திறந்ததாலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
தங்கமணிவேல், சண்முகநாதன் கூறியதாவது: வாய்க்கால் முழுவதும் சேதமடைந்து,செடி, கொடிகளின் குப்பை அடைத்துள்ளது. இதனால் வாய்க்கால் வழியே தண்ணீர் செல்லாமல் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. வாய்க்காலை சீரமைக்க கோரி பல முறை நீர்வளத்துறையிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேற்கு பகுதி ஷட்டரை திறந்து விட்டால் வைகையாற்றுக்கு தண்ணீர் செல்லும். அந்த ஷட்டரையும் திறக்கவில்லை.
குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள கண்மாயின் மடையை வேண்டுமென்றே திறந்து விட்டதால் சத்யா நகர், திருமலை நகர், முத்தையா நகரில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் 200 குடியிருப்புகளில் உள்ளவர்கள் சிரமப்படுகிறோம் என்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கண்மாய் மடை,வாய்க்காலை ஒட்டி குடியிருப்புகள் பெருகி விட்டன. இருநாட்களுக்கு முன் மணல் மூடையை அடுக்கி மடையை அடைத்து விட்டோம். நேற்று யாரோ வேண்டுமென்றே மூடையை பிரித்து விட்டதால் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது. மீண்டும் மணல் மூடைகளை அடுக்க உத்தரவிட்டுள்ளோம். மடையை திறந்தவர் குறித்து விசாரிக்கிறோம் என்றனர்.