ADDED : ஆக 12, 2026 06:31 PM
மதுரை: இருபோக சாகுபடிக்கான 2ம் போகத்திற்கு செப். முதல் அல்லது 2வது வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் மதுரை மாவட்டத்தின் இருபோக சாகுபடியின் முதல்போகத்திற்கு ஜூன் 4ல் தண்ணீர் திறக்காமல் 45 ஆயிரம் ஏக்கர் பாசனப்பகுதிகள் பாதிக்கப்பட்டன. தற்போது இரண்டாம் போகத்திற்கான மழையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வைகை அணையில் 4000 மில்லியன் கனஅடி தண்ணீர் உயர்ந்தால் மட்டுமே பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோகத்தின் இரண்டாம் போகத்திற்கு பாசனத்தண்ணீர் கிடைக்கும்.
தற்போது 3700 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்த நிலையில், வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்தது. இதனால் செப். முதல் அல்லது 2வது வாரத்தில் இரண்டாம் போகத்திற்கான தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலுாரில் 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலத்தில் 19 ஆயிரத்து 500 ஏக்கருக்கான ஒருபோக சாகுபடிக்கு 6000 மில்லியன் கனஅடி தண்ணீர் தேவை என்பதால் செப். கடைசியில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது என்றனர்.
