/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமுதாயக்கூடத்தில் கழிவறையை காணோம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார்
/
சமுதாயக்கூடத்தில் கழிவறையை காணோம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார்
சமுதாயக்கூடத்தில் கழிவறையை காணோம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார்
சமுதாயக்கூடத்தில் கழிவறையை காணோம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார்
ADDED : மார் 05, 2024 05:10 AM
மதுரை, : மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
நகர் பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துக்குமார் அளித்த மனு: மதுரை மாநகராட்சி 35வது வார்டில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. பணிமுடிந்து ஓராண்டாகியும் திறக்கவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, கட்டப்பட்டுள்ளது என்று பதிலளித்தனர். ஆனால் அங்கு கழிவறை இல்லை. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரும் ஆய்வு செய்து, இல்லை என கண்டறிந்து அமைக்கும்படி உத்தரவிட்டார்.
மீண்டும் தகவல் அறியும் சட்டத்தில் கேட்டபோது, அங்கு கழிவறை வசதி கிடையாது என முரணாக பதில் தருகின்றனர். கட்டடம் கட்டி பல மாதங்கள் ஆனதால் விரிசல் ஏற்பட்டு ஸ்திரத்தன்மை பாதிக்கிறது. தொகுதி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மனு மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., பார்வையாளர் ராஜரத்தினம் அளித்த மனு: மதுரை பழங்காநத்தம் - டி.வி.எஸ்., நகர் இணைப்பு மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி தேவை. விளக்கு இல்லாததால் இரவு நேரம் மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பழங்காநத்தம் பகுதியில் இருந்து பாலம் பகுதிக்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். டி.வி.எஸ்., நகர் - முத்துப்பட்டி வழியில் ரவுண்டானா மற்றும் சாலையை பயன்படுத்த முடியாத அளவு உள்ளதை சரிசெய்ய வேண்டும். மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரம் வெளியூர் பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஹிந்து துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் சுடலை ஆனந்தா சுவாமி மனுவில், ''ஏப்ரலில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடக்க உள்ள நிலையில் கோயில் பகுதியில் கழிவறை, குளியலறை வசதிகள் இல்லை. பக்தர்கள் தங்கவும், குடிநீர் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

