/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மன்னிப்பு கேட்டாலும் இர்பானை விடமாட்டோம் அமைச்சர் சுப்பிரமணியன் ஆவேசம்
/
மன்னிப்பு கேட்டாலும் இர்பானை விடமாட்டோம் அமைச்சர் சுப்பிரமணியன் ஆவேசம்
மன்னிப்பு கேட்டாலும் இர்பானை விடமாட்டோம் அமைச்சர் சுப்பிரமணியன் ஆவேசம்
மன்னிப்பு கேட்டாலும் இர்பானை விடமாட்டோம் அமைச்சர் சுப்பிரமணியன் ஆவேசம்
ADDED : அக் 23, 2024 05:06 AM
மதுரை : ''அறுவை சிகிச்சை அரங்கினுள் தனது குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்ததாக வீடியோ வெளியிட்ட 'யு டியூபர்' இர்பான் மன்னிப்பு கேட்டாலும் இந்த முறை நடவடிக்கை எடுக்காமல் விடமாட்டோம்,'' என மதுரையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.9.9 கோடி செலவில் அமைக்கப்பட்ட அதிநவீன கேத்லேப் ஆய்வகம், நுரையீரல் ஆய்வு கூடம் மற்றும் சமையலறை உபகரணங்கள் பயன்பாட்டை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: துபாயில் கருவின் பாலினம் வெளிப்படுத்தலாம்; தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது குழந்தையின் பாலினம் குறித்து துபாயில் ஸ்கேன் பார்த்த 'யு டியூபர்' இர்பான் கடந்த மே மாதம் வீடியோ வெளியிட்டார். அப்போது மருத்துவம், ஊரக சுகாதார சேவை இயக்குநகரம் (டி.எம்.எஸ்.) மூலம் நோட்டீஸ் அனுப்பிய போது மன்னிப்பு கேட்டார்.
இந்த முறை சென்னை ரெயின்போ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப்பேறு நிகழ்வை வீடியோவாக வெளியிட்டதோடு குழந்தையின் தொப்புள்கொடியை அவரே வெட்டியுள்ளார். அறுவை சிகிச்சை அரங்கினுள் எத்தனை பேர் சேர்ந்து வீடியோ எடுத்தனர் என தெரியவில்லை. தேசிய மருத்துவ கமிஷன் சட்டம் 2021 ன் படி டாக்டர் அல்லாத ஒருவர் தொப்புள் கொடி வெட்டுவது தவறு. மருத்துவ சட்ட விதிகளை மீறிய இர்பான் மீது பிரிவு 34 (1, 2) ன் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீதும் மருத்துவமனை டாக்டர் நிவேதிதா மீதும் டி.எம்.எஸ். மூலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் நிவேதிதா மருத்துவ சேவை செய்வதற்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் சட்டரீதியாகவும், துறை ரீதியாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.