ADDED : ஜன 03, 2024 09:31 PM
மதுரை:நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் செல்லும் வழியில் ஒருவர் தீக்குளித்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் நுால் வெளியீட்டு விழாவுக்காக நேற்று முன் தினம் மதியம் மதுரை வந்தார்.
கே.கே.நகர் வழியாக சர்க்கியூட் ஹவுசுக்கு சென்று, சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அவர் வருவதற்கு அரை மணி நேரம் முன், கே.கே.நகர் வக்பு வாரிய கல்லுாரி அருகே ஒருவர் திடீரென தீக்குளித்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், மதுரை மாவட்டம் பாசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், 48, என்பது தெரிந்தது. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
வெல்டிங் தொழில் செய்து வரும் அவர் கடன் தொல்லையால் தின்னர் மற்றும் பெட்ரோலை பயன்படுத்தி தீக்குளித்துள்ளார்.
அவர் ஏன் கே.கே.நகரில் தீக்குளிக்க வேண்டும்; வேறு காரணங்கள் உண்டா என அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.