/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் மலை வழக்கை எடுக்கத்துாண்டியது எது? மதுரை பாராட்டு விழாவில் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் விளக்கம்
/
திருப்பரங்குன்றம் மலை வழக்கை எடுக்கத்துாண்டியது எது? மதுரை பாராட்டு விழாவில் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் விளக்கம்
திருப்பரங்குன்றம் மலை வழக்கை எடுக்கத்துாண்டியது எது? மதுரை பாராட்டு விழாவில் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் விளக்கம்
திருப்பரங்குன்றம் மலை வழக்கை எடுக்கத்துாண்டியது எது? மதுரை பாராட்டு விழாவில் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் விளக்கம்
ADDED : நவ 22, 2025 12:26 AM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கை எடுத்து நடத்தத்துாண்டியது எது என்பது தொடர்பாக, மதுரையில் நடந்த பாராட்டு விழாவில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் விளக்கமளித்தார்.
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவது தொடர்பான வழக்கில் வெற்றி பெற்று தந்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மதுரை பரவை, 'ஆகாஷ் கிளப்'பில் பாராட்டு விழா நடந்தது.
மாவட்ட தலைவர் பக்தவத்சலம் தலைமை வகித்தார். பொருளாளர் கோதண்டராமன் முன்னிலை வகித்தார். தென் மண்டல தலைவர் இல. அமுதன் வரவேற்றார். மாநில தலைவர் கணேசன், ராமகிருஷ்ணனுக்கு நினைவு பரிசு வழங்கினார். விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் சங்கர சீதாராமன், ஆகாஷ் கிளப் நிர்வாக இயக்குநர் பாலாஜி, வழக்கறிஞர்கள் டி.கே.கோபாலன், பார்த்தசாரதி, நடேஷ்ராஜா ஆகியோர் பேசினர்.
வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:
திருப்பரங்குன்றம் மலை வழக்கை முதலில் நான் எடுக்கவில்லை. இரு நீதிபதிகள் அமர்வால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது நீதிபதி எஸ்.ஸ்ரீமதி தன் தீர்ப்பை வழங்கினார். அப்போது, அவர் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் சமூக வலைதளங்களில் அவரை கேவலமாக வசைபாடினர்.
ஒரு நீதிபதி சட்டத்தின் அடிப்படையில் கடமையை செய்கையில், அவருக்கு ஜாதி சாயம் பூசி கேவலப்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவே இவ்வழக்கை எடுத்து நடத்த துாண்டியது.
பிராமண சமுதாயம் பொதுப்பிரச்னைகளில் நீதி, நியாயத்தை நிலைநாட்டுவதற்கு தயங்காது. அதற்கான வாய்ப்பாக இவ்வழக்கை அணுகினேன். எதிர்தரப்பினர் பக்கம் அரசு இருந்த தைரியத்தில் வழக்கை மேற்கொண்டனர். எனக்கு பா.ஜ.,வினரோ, ஆர்.எஸ்.எஸ்., அமைப்போ உதவவில்லை.
என் மகன், இரண்டரை மாதங்களாக 416 தீர்ப்புகளை இவ்வழக்கிற்காக எடுத்துக் கொடுத்தார். அதில் முக்கியமாக, ராம ஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் வாதாடினேன்.
பிரசவத்தின் வலி, பெற்ற குழந்தையின் முகத்தை பார்த்ததும் மறைந்து விடும். தற்போது அவ்வாறு உணர்கிறேன். முருகனின் நாமத்தை சொல்லி ஆரம்பிப்பேன். நிறைய விஷயங்கள் எனக்கு சாதகமாக இவ்வழக்கில் அமைந்தன. இந்த வெற்றிக்கு முருகனே காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிராமணர் சங்க மாவட்ட பொது செயலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். ஆடிட்டர் ஸ்ரீதர், ராமச்சந்திரா கண் மருத்துவமனை டாக்டர் சீனிவாசன், ஓய்வு பெற்ற போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன், அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர், தமிழ்நாடு பிராமண சமாஜ மாவட்ட தலைவர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

