/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி விரிவாக்க பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 'எப்ப வரும் ஆபீசர்' ; ரூ.471 கோடி பணிகள் முடிந்தும் பயன்பாட்டுக்கு வராதது ஏனோ

ADDED : ஜூலை 07, 2025 02:32 AM

மதுரை: மதுரை மாநகராட்சி விரிவாக்கப் பகுதியில் ரூ.471 கோடி பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தி சோதனை நடத்தியும் பயன்பாட்டுக்கு வரவில்லை என மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அப்பகுதி திறந்தவெளி கால்வாயில் கழிவுகள் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
மாநகராட்சியில் பழைய 72 வார்டுகளுக்கு மட்டுமே பாதாளச் சாக்கடை திட்டம் வசதி இருந்தது. பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் இதுவரை வீடுகளுக்கு பாதாளச் சாக்கடை இணைப்புகள் வழங்கப்படவில்லை. பல முறை சோதனை ஓட்டம் முடிந்தும் இதுவரை இவ்வார்டுகளில் வெளியாகும் சாக்கடை கழிவுகள் திறந்த வெளி கால்வாயில் தேங்கி, சுகாதாரக் கேடை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இப்பகுதிகளில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளதால் அதை முடிக்கும் பணியில் அதிகாரிகள் முனைப்பு காட்டுவதால் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிந்தும் அது செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் நீடிப்பதாக விரிவாக்க வார்டுகளின் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் பகுதியில் பணிகள் துவங்கவே இல்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தின்படி விரிவாக்க வார்டுகளில் 215 கி.மீ., நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதிப்பு பணிகள் நடந்துள்ளன. குறிப்பாக அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு தொகுதியில் திட்டம் நிறைவு பெற்றது. பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை விரைவுபடுத்தவும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.