/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எப்போ சார் தருவீங்க...: 4 மாதங்களாகியும் இழுபறியில் டெபாசிட் முதிர்வுத்தொகை: ஒத்தக்கடை கூட்டுறவு கடன் சங்கம் மீது வாடிக்கையாளர்கள் புகார்

UPDATED : ஆக 15, 2025 04:38 AM
ADDED : ஆக 15, 2025 02:46 AM

மதுரை: மதுரை ஒத்தக்கடை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் டெபாசிட் செய்திருந்த 150 உறுப்பினர்களின் முதிர்வுத் தொகையை ஒப்படைக்காமல் ஏமாற்றுவதாக பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்துள்ளனர். கூட்டுறவுத்துறையின் கீழ் மதுரை மாவட்டத்தில் 174 கடன் சங்கங்கள் உள்ளன. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பயிர்க்கடன், பிற கடன்களை பெற முடியும். அதேபோல டெபாசிட்களை செலுத்தவும் வசதியுள்ளது. ஓராண்டுக்கு டெபாசிட் செய்தவர்களுக்கு அதற்கான வட்டியை மாத, காலாண்டு தவணை முறையில் சங்கங்கள் தருகின்றன. ஒத்தக்கடை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஓராண்டு வரை டெபாசிட் செய்த 150 பேருக்கு டெபாசிட் முதிர்வடையும் காலம் வரை வட்டி வழங்கப்பட்டது. ஏப்ரலில் முதிர்வடைந்த 150 பேரின் டெபாசிட் முதிர்வுத் தொகையை தற்போது வரை தராமல் சங்கம் ஏமாற்றுகிறது என்கின்றனர் உறுப்பினர்கள்.
அவர்கள் கூறியதாவது: தனியார் நிறுவனங்களில் கூடுதல் வட்டிக்கு ஆசைப்படாமல் குறைந்த வட்டிக்கு ஒத்தக்கடை கடன் சங்கத்தில் டெபாசிட் செய்தோம். டெபாசிட் காலம் முடிந்த மறுநாளே முதிர்வுத்தொகையை ஒப்படைக்க வேண்டும். ஏப்ரல் வரையான டெபாசிட் முடிவடையும் காலம் வரை வட்டி எங்களுக்கு கிடைத்தது. அதன் பின் முதிர்வுத்தொகை தராமல் தினமும் சங்கத்திற்கு அலைய விடுகின்றனர். 4 மாதங்களாக வட்டியும் தரவில்லை. தனியார் நிதி நிறுவனங்கள் இதுபோல ஏமாற்றினால் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யலாம். அரசு நிறுவனமே ஏமாற்றினால் என்ன செய்வது.
சில டெபாசிட் தாரர்களின் பெயர்களை டெபாசிட் பத்திரத்தில் தவறாக குறிப்பிட்டுள்ளனர். அதை சரிசெய்து தர கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநரிடம் முறையிட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. 4 மாதங்களாக அலைய வைத்ததற்கு அதற்கான வட்டியுடன் முதிர்வுத்தொகையை ஒப்படைக்க வேண்டும் என்றனர்.
நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதனிடம் கேட்டபோது, ''இதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளோம். அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்'' என்றார்.