/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சீமை கருவேல மரங்களை வெட்டினாலும் வெட்டாவிட்டாலும்... குற்றம் குற்றமே.: தெளிவான வழிகாட்டுதல் இன்றி தவிக்கும் நீர்வளத்துறையினர்

ADDED : செப் 27, 2025 04:25 AM

மதுரை: அரசு புறம்போக்கு நிலம், கண்மாய், கால்வாய் பகுதிகளில் சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் செயல்படுத்துவதில் ஏற்படும் பிரச்னையால், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கள்ளந்திரி இருபோக பாசனத்திட்டம், மேலுார், திருமங்கலத்தில் ஒருபோக பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வைகை அணையிலிருந்து ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் பெரியாறு பிரதான கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாய், நிலையூர் கால்வாய், விரிவாக்க கால்வாய் என பல நுாறு கி.மீ., நீள கால்வாய்களில் பயணித்து 2000 கண்மாய்களில் சேருகிறது. தண்ணீர் வராத காலங்களில் சீமைக்கருவேல மரங்கள் வேகமாக வளர்கின்றன. தண்ணீர் வந்தபின் ஆழ வேரூன்றி வளர்கின்றன. வைகையாற்றின் உட்பகுதி முழுவதும் சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அகற்றும் பணி சவாலாக உள்ளது. இப்பிரச்னை மாவட்ட அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'பஞ்சாயத்து நிர்வாகம், நீர்வளத்துறை அதிகாரிகள் அகற்றுவதில்லை. கலெக்டரிடம் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம்' என்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: லாபம் இல்லாததால் ஒப்பந்ததாரர்கள் அகற்ற முன் வருவதில்லை. உள்ளூர் மக்களே மரங்களை வெட்டி எடுக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாராவது அகற்றினால் 'நாங்கள்(அதிகாரிகள்) காசு வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கியதாக' விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். வெட்டாவிட்டாலும் கலெக்டரிடம் புகார் செய்கின்றனர். இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தான் தீர்வு காண வேண்டும் என்றனர்.
வேளாண் பொறியியல் துறையின் கீழ் சீமை கருவேல மரங்களை வேருடன் பெயர்க்கும் கருவி கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டு மதுரை விவசாயக் கல்லுாரியில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. 3 வயதுடைய மரங்கள் வரை எளிதாக அசைத்து பெயர்க்கும் இந்த கருவியை பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் பிரவீன்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.