/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் சொத்தை பாதுகாக்கும் பொறுப்பு யாருக்கு; தெளிவுபடுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கோயில் சொத்தை பாதுகாக்கும் பொறுப்பு யாருக்கு; தெளிவுபடுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் சொத்தை பாதுகாக்கும் பொறுப்பு யாருக்கு; தெளிவுபடுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் சொத்தை பாதுகாக்கும் பொறுப்பு யாருக்கு; தெளிவுபடுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 18, 2024 07:53 AM
மதுரை: கடவுள் 'மைனர்'; ஆதலால் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
கரூர் மாவட்டத்தில் பல கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அல்லது முறைப்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மதிப்புமிக்க கோயில் சொத்துக்களில் வாடகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்கின்றனர். அறநிலையத்துறை செயலர், கமிஷனர், வருவாய்த்துறை கமிஷனர், டி.ஜி.பி.,க்கு புகார் அனுப்பினேன். கோயில்களின் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி: ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தான்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில், அய்யர்மலை கல்யாணபசுபதீஸ்வரர் கோயில், ரத்தினகிரீஸ்வரர் கோயில், வெண்ணைய்மலை பாலசுப்ரமணியசுவாமி கோயில், பாலமலை பாலசுப்ரமணியசுவாமி கோயில், சின்னதாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கோயில், கரூர் மாரியம்மன் கோயில்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை உத்தரவிட்டது. சில வழக்குகளில் கோயில்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்யக்கோரி டி.ஆர்.ஓ.,விடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பு தெரிவித்தது.
பெரும்பாலும் சட்ட பட்டப் படிப்பு முடித்தவர்கள் கோயில்களில் செயல் அலுவலர்களாக உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, கோயில் சொத்துக்களை பாதுகாக்க ஒரு பக்தர், நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டியுள்ளது. மனுதாரரின் புகாரின் பேரில் 2015 ல் அதிகாரிகள் கூட்டம் நடத்தி கலெக்டர் மூலம் முடிவெடுத்தனர். ஆனால் 8 ஆண்டுகளாக கோயில் சொத்துக்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளவில்லை.
கோயில்கள் தரப்பில், 'சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்க்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பட்டா மாறுதல் கோரி டி.ஆர்.ஓ.,விடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மேல் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,' என தெரிவித்தது.
கடவுள் மைனர். ஆதலால் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனக்கூறிஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை தடுப்பதற்கு பதிலாக, கோயில் நிலத்தை மீட்க அறநிலையத்துறைக்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்கள் கோயிலுக்குரிய பாத்தியத்தை ஒப்புக் கொண்டு நியாய வாடகையை செலுத்த விரும்பினால், அதை கோயில் நிர்வாகம் பரிசீலித்து நிர்ணயிக்க வேண்டும். நிலுவைத் தொகையை செலுத்த தவணை முறையில் அவகாசம் வழங்க வேண்டும்.
வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் கூட்டம் நடத்த வேண்டும். கோயில் சொத்துக்களை மீட்பதில் அறநிலையத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலை கலெக்டர் வழங்க வேண்டும். பட்டா பாஸ்புக் சட்டத்தின் கீழ் அறநிலையத்துறை தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் மீது இயன்றவரை விரைவாக தீர்வு காண டி.ஆர்.ஓ.,விற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.