/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மனைவி உயிரிழப்பு; காரைக்குடி மருத்துவமனை மீது மானாமதுரை இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டு
/
மனைவி உயிரிழப்பு; காரைக்குடி மருத்துவமனை மீது மானாமதுரை இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டு
மனைவி உயிரிழப்பு; காரைக்குடி மருத்துவமனை மீது மானாமதுரை இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டு
மனைவி உயிரிழப்பு; காரைக்குடி மருத்துவமனை மீது மானாமதுரை இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டு
ADDED : நவ 01, 2025 03:20 AM
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.எம்.சி.,மருத்துவமனையில் மனைவிக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் புகார் கூறியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் ரவீந்திரனின் மனைவி சர்மிளா 49. இவர் தொடர்ந்து வாந்தி எடுத்ததால் காரைக்குடி கே.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் மனைவி உயிரிழந்ததாகவும், மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாகவும்' ஒன்றரை மாதத்திற்கு பின்பு நேற்று இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறினார்.
இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கூறியதாவது: மனைவி சர்மிளாவை செப்., 22 மாலை 5:45 மணிக்கு காரைக்குடி கே.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். சிகிச்சை அளித்த டாக்டர்கள் சரியாகி விட்டது, வீட்டிற்கு செல்லலாம் என்றனர். மனைவி உடல் எல்லாம் வலி எடுக்கிறது. சரியாகவில்லை மீண்டும் பரிசோதனை செய்யும்படி தெரிவித்தார். இ.சி.ஜி., எடுத்து பார்த்தோம். அதில் ஒன்றுமில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் மனைவி வற்புறுத்தலால் மீண்டும் இரவு 9:00 மணிக்கு இ.சி.ஜி., எடுத்து பார்த்த போது ஹார்ட் அட்டாக் அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடனடியாக ஊசி போட வேண்டும் என்றும் தெரிவித்தனர். பணம் கட்டிய பிறகு ரூ.10 ஆயிரத்திற்கு ஒரு ஊசியும், ரூ.56 ஆயிரத்திற்கு ஒரு ஊசியும் போட்டனர். ஆனாலும் எனக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக, மதுரையிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக மருத்துவமனை நிர்வாக இயக்குனரிடம் தெரிவித்தேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதய சிகிச்சை சிறப்பு டாக்டர் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
டாக்டர் காமாட்சி சந்திரனை தொடர்பு கொண்டபோது அவர் அலைபேசியை எடுக்கவில்லை. மறுநாள் அதிகாலை என்னை அழைத்து, நீங்கள் வற்புறுத்துவதால் நாங்கள் மதுரை அனுப்பி வைக்கிறோம், என்றனர். ஆம்புலன்சுக்கு ரூ.12 ஆயிரம் கட்டச் சொல்லி அதையும் கட்டியதால் ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். மதுரைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து பல மணி நேரம் ஆகி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
எனது மனைவி இறந்தது தெரிந்தும் ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனை மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன். இறப்பு அறிக்கையில் அதிகாலை 2:15 மணிக்கு இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இறந்தவரை ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு கூறினார்.
டாக்டர் சொல்வது என்ன டாக்டர் காமாட்சி சந்திரன் கூறுகையில், இ.சி.ஜி., எடுத்தபோது ஹார்ட் அட்டாக் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக லோடிங் டோஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஒப்புதல் பேரில் ரத்த உறைவு அடைப்பை எடுக்கும் முயற்சி டாக்டர்கள் மூலம் நடத்தப்பட்டது. சிகிச்சை முடிந்த நிலையில் இரவு 11:30 மணிக்கு மீண்டும் ஹார்ட் அட்டாக் வந்தது. செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டது. அனைத்து சிகிச்சையும் முறைப்படி அளிக்கப்பட்டது.
இது குறித்து ரவீந்திரனிடம் தெரிவித்து கையெழுத்து பெறப்பட்டது. அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் வழியிலேயே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்த சிகிச்சை தான் அனைத்து மருத்துவமனையிலும் நடைமுறையில் உள்ளது. அதைத்தான் நாங்களும் செய்தோம் என்றார்.

