/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தண்ணீருக்காக ஊருக்குள் நுழையும் காட்டு விலங்குகள்
/
தண்ணீருக்காக ஊருக்குள் நுழையும் காட்டு விலங்குகள்
ADDED : ஜூலை 20, 2025 04:44 AM
சோழவந்தான்:சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம், நாகமலை வனப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் ஊருக்குள் புகுந்து காட்டு விலங்குகள் அச்சமுறச் செய்கின்றன என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.
விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது: விக்கிரமங்கலம், கோவில்பட்டி, மேலப்பெருமாள் பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் நாகமலை காடுகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளன. மான், முயல், பன்றி, நரி, மயில் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் காடுகளில் உள்ளன.
மலைக்காடாக இருப்பதால் விலங்குகள் குடிப்பதற்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை. இதனால் தண்ணீருக்காக பகலிலும், இரவிலும் ஊருக்குள் வருகின்றன. மான்கள் பயிரிட்டுள்ள கத்தரி, வெண்டை செடிகளை உண்கின்றன. காட்டுப்பன்றிகள் நெற்பயிர்கள், பூச்செடிகளை மிதித்து நாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.
விலங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கின்றன. இதை தடுக்க வனப்பகுதிக்குள் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, 'இதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால் ஆழ்துளை கிணறு அமைக்க இயலாது. அதனால் அருகே உள்ள தனியார் கிணறுகளில் இணைப்பு பெற்று தண்ணீர் தொட்டி அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.' என்றார்