/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் வயல்களில் 'ஆல்கே' படலம் இந்தாண்டும் மகசூல் பாதிக்கப்படுமா
/
நெல் வயல்களில் 'ஆல்கே' படலம் இந்தாண்டும் மகசூல் பாதிக்கப்படுமா
நெல் வயல்களில் 'ஆல்கே' படலம் இந்தாண்டும் மகசூல் பாதிக்கப்படுமா
நெல் வயல்களில் 'ஆல்கே' படலம் இந்தாண்டும் மகசூல் பாதிக்கப்படுமா
ADDED : ஜூலை 23, 2025 02:34 AM

மதுரை : மதுரை மேற்கு வட்டாரத்தில் உள்ள தோடனேரி, கள்ளிக்குடி, சமயநல்லுார் பகுதி நெல் வயல்களில் கரும்பச்சை நிறத்தில் பாசிப்படலம் (ஆல்கே) படர்ந்துள்ளதால் விவசாயிகள் உடனடியாக தண்ணீரை வடிகட்டி காப்பர் சல்பேட் மருந்தை துாவ வேண்டும் என வேளாண் துறை, விவசாய கல்லுாரி விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கடந்த டிசம்பர், ஜனவரியில் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பாசி படர்ந்ததால் மதுரை மாவட்டத்தில் 1090 எக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் 4288 எக்டேர் மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டு தற்போது வரை இழப்பீடு கிடைக்கவில்லை. இந்தாண்டும் பாசிப்படலம் தேங்கியுள்ளதால் விவசாயிகள் வேளாண் துறையினரிடம் முறையிட்டனர்.
வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ், நோயியல் துறை பேராசிரியை மாரீஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குனர் மேற்கு பாலமுருகன் தோடனேரி, கள்ளிக்குடி, சமயநல்லுார் பகுதி நெல் வயல்களை ஆய்வு செய்தனர்.
இணைப் பேராசிரியர் சுரேஷ் கூறியதாவது: கை நடவு மட்டுமல்ல நாற்று நட்ட நெல் வயல்களிலும் அடர் நடவு, பயிர்களுக்கு போதுமான காற்றோட்டம் இல்லாததால் 'ஆல்கே' வளர்ச்சி அதிகமாக உள்ளது. சூரிய வெளிச்சம் போதுமான அளவில் நெற்பயிர்களுக்கு கிடைக்கவில்லை. நெல் வயலுக்கு காய்ச்சலும் பாய்ச்சலும் முறை தான் சரியானது.
பயிர்களுக்கான பரிந்துரை ஒரு ஏக்கருக்கு 1.25 கிலோ காப்பர் சல்பேட் மருந்துடன் 1.25 கிலோ மணலில் கலந்து நாற்று நட்ட 25 நாட்களில், வயலில் முழுவதும் நீர் வடிந்தபின், துாவ வேண்டும். பாசி படலம் அதிகமாக இருந்தால் 15 நாட்கள் கழித்து காப்பர் சல்பேட், மணல் கலந்து துாவ வேண்டும். சிலந்திகளின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் ஒன்றரை மில்லி 'ஸ்பைரோ மெஸ்பின்' மருந்தை கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.